ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் 'செம்பருத்தி'. இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் இந்த சீரியலுக்கு ரசிகர்களாக இருக்கின்றனர். பணக்கார ஹீரோ தனது வீட்டில் பணிபுரியும் பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக போகும் கதையில் அக்னி, ஷபானா, சூரியவம்சம் புகழ் பிரியா ராமன் ஆகியோர் நடித்து வந்தனர்.
இந்நிலையில் இந்த சீரியலில் உமா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை ஜெனிஃபர். 2019ஆம் ஆண்டு இவர் காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவரது கணவர் கார் ஓட்டுநர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சில மாதங்களிலேயே கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர்.
இதன் பிறகு தற்போது சீரியலில் உதவி இயக்குனராக பணிபுரிந்து வரும் நவீன்குமார் என்பவருடன் அவருக்கு காதல் மலர்ந்து. இருவரும் காதலித்து வந்த நிலையில் தனது முதல் திருமணத்தை மறைத்து விட்டதாக கூறி தனது குடும்பத்தினருடன் வந்து, ஜெனிபரின் குடும்பத்தினரையும் அவரது பொருட்களையும் சேதப்படுத்த முயற்சித்தாக கூறப்படுகிறது. இதில் இரு தரப்பினருக்கும் கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்த செய்தி சமீப நாட்களாக வைரலாகிவந்த நிலையில் நடிகை ஜெனிபர் தற்போது செய்தியாளர்களை சந்தித்துள்ளார். அவர் கூறும் பொழுது "நவீன்குமார் என்னையும் எனது தங்கையையும் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் காயப்படுத்தினார். அவருக்கு எனக்கு திருமணம் ஆன விஷயம் தெரியும். என்னை அவமானப்படுத்த வேண்டும் என்று இப்படி செய்கிறார். எனது தந்தையையும் அடித்தனர். மேலும் பெண்களை துன்புறுத்திய பிரிவில் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் எனக்கு மான நஷ்ட ஈடும் கொடுக்க வேண்டும். இன்னொரு சித்ராவாக நான் மாறி விடக்கூடாது என்பதற்காகத்தான் இப்படி தைரியமாக முன் வந்துள்ளேன்" என்று கண்ணீர் மல்க செய்தியாளர்களை சந்தித்து கூறியுள்ளார். இதனிடையே போலீஸ் விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.