இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி, பார்த்திபன், ஆண்ட்ரியா, ரீமா சென் நடிக்க, ஜி.வி.பிரகாஷ் இசையில் உருவான திரைப்படம் ‘ஆயிரத்தில் ஒருவன்’.

இன்றுவரை இளைஞர்களுக்கு பிடித்தமான இயக்குநர் செல்வராகவன் படங்களில், முக்கியமான படமாக ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் பேசப்பட்டு வருகிறது. இந்த ஃபேண்டஸி திரைப்படம் குறித்து நீண்ட காலத்திற்கு பிறகு மௌனம் கலைத்து ஒரு உண்மையை போட்டு உடைத்துள்ளார் இயக்குநர் செல்வராகவன்.
ஆம், இது குறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் தற்போது பதிவிட்டுள்ள இயக்குநர் செல்வராகவன், “ஆயிரத்தில் ஒருவன் படத்தின் உண்மையான பட்ஜெட் 18 கோடி ரூபாய். ஆனால் இதை ஒரு மெகா பட்ஜெட் படமாக எதிர்பார்ப்பை ஏற்படுத்தவே படத்தின் பட்ஜெட் 32 கோடி ரூபாய் என அறிவிக்க முடிவு செய்தோம்.
என்ன முட்டாள்தனம்! படம் உண்மையான பட்ஜெட்டை வசூலித்தாலும் அது சுமாரான வசூல் என்றே கருதப்பட்டது! முரண்பாடுகள் எதுவாக இருந்தாலும் பொய் சொல்லக்கூடாது என்பதை கற்றுக்கொண்டோம்!” என தெரிவித்துள்ளார்.
இயக்குநர் செல்வராகவன், தனுஷ் நடிப்பில் ‘நானே வருவேன்’ திரைப்படத்தை இயக்கி வருவதுடன், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷுடன் இணைந்து ‘சாணி காயிதம்’ படத்தில் அறிமுக நடிகராக நடிக்கிறார்.
இதேபோல், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகும் தளபதி விஜயின் 65-வது படமான பீஸ்ட் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்துள்ளார்.