தமிழ் சினிமாவின் முன்னணி இசை அமைப்பாளர்களில் ஒருவராக வலம் வருபவர் யுவன் ஷங்கர் ராஜா.

அவர் இசை அமைப்பாளராக அறிமுகமாகி, 25 ஆண்டுகள் கழிந்த நிலையில், காமெடி, லவ், இன்ஸ்பயரிங், சோகம் என அனைத்து ஏரியாவிலும் இசை மூலம் பூந்து விளையாடவும் செய்து வருகிறார்.
அது மட்டுமில்லாமல், அவரது பாடல்கள் பலவும் ரசிகர்களுக்கு பெரும் மருந்தாக இருந்து வருவதுடன் பலரது பிளேலிஸ்ட்டையும் ஆக்கிரமித்து வருகிறது.
தொடர்ந்து, ஏராளமான ஹிட் பாடல்களை கொடுத்து ரசிகர்களை கட்டிப் போட்டு வரும் யுவன் ஷங்கர் ராஜாவின் பிறந்தநாளான இன்று (31.08.2022), அவரது ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள், தங்களின் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தனது பிறந்தநாளை முன்னிட்டு, ரசிகர்களுடன் ட்விட்டர் தளத்தில் கலந்துரையாடினார் யுவன்.
இதில், #AskU1 என்ற ஹேஷ்டேக்குடன் ஏராளமான கேள்விகளையும் ரசிகர்கள் கேட்டு வந்தனர். அதில் பலவற்றிற்கு வீடியோவை பதிவிட்டு பதில்களையும் தெரிவித்திருந்தார் யுவன் ஷங்கர் ராஜா. அந்த வகையில், இயக்குனர் செல்வராகவன் ஜாலியாக கேட்ட கேள்வியும், அதற்கு யுவன் சொன்ன பதிலும் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.
செல்வராகவன் இயக்கத்தில் அடுத்ததாக "நானே வருவேன்" திரைப்படம் உருவாகி வருகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு, சகோதரர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்து வரும் இந்த படத்தின் சில போஸ்டர்களும் அடுத்தடுத்து வெளியாகி இருந்தது. விரைவில் இந்த திரைப்படம் வெளியாக உள்ளதாகவும் போஸ்டர்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கலைப்புலி எஸ். தாணு இந்த படத்தை தயாரித்து வரும் நிலையில், யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். அப்படி ஒரு சூழ்நிலையில், யுவன் ஷங்கர் ராஜாவிடம் கேள்வி கேட்ட செல்வராகவன், நானே வருவேன் படத்தின் ரிலீஸ் எப்போது என்றும், ஏதாவது அப்டேட் கொடுங்கள் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு பதிலளித்த யுவன், "சார், நானே வருவேன் ரிலீஸ் ஆகுறத என்கிட்ட கேக்குறீங்க. படத்தின் பின்னணி இசை பணிகள் ஆரம்பமாகி உள்ளது. மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். எனக்கு படம் மிகவும் பிடித்து இருக்கிறது. தனுஷ் சார் அற்புதமாக நடித்துள்ளார். செல்வா சாரும் அப்படி தான். மேலும், அதில் நடித்துள்ள அனைவரும் சிறப்பாக செய்துள்ளார்கள்" என குறிப்பிட்டுள்ளார்.
விரைவில் நானே வருவேன் திரைப்படம் வெளியாகும் என படக்குழு அறிவித்து வரும் நிலையில், பின்னணி இசை பணிகள் நடந்து வருவதால், அடுத்தடுத்து அப்டேட்கள் வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.