வெந்து தணிந்தது காடு படத்தின் மல்லிப்பூ பாடலை பாராட்டி சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
வெந்து தணிந்தது காடு படம் கடந்த செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தினை தமிழகம் முழுவதும் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் ரிலீஸ் செய்தது.
வெந்து தணிந்தது காடு' படத்தில் சிம்பு கதாநாயகனாக 'முத்து' எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தென் மாவட்டத்தில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளியாக மும்பைக்கு செல்லும் முத்து வீரனின் (சிம்பு) வாழ்க்கை சம்பவங்களே "வெந்து தணிந்தது காடு" படமாகும்.
'வெந்து தணிந்தது காடு’ படத்தை ஐசரி கணேஷ் தனது வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார்.
விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களுக்கு பின் கௌதம் மேனன், சிம்பு, ஏ.ஆர். ரஹ்மான் & தாமரை ஆகிய நால்வர் கூட்டணி மீண்டும் மூன்றாம் முறையாக இந்த படத்திற்காக இணைந்தது.
இந்த படத்தில் இடம்பெற்றுள்ள மல்லிப்பூ பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. பாடகி மதுஶ்ரீ பட்டாச்சார்யா இந்த பாடலை பாடியுள்ளார். மேலும் பிருந்தா மாஸ்டர் இந்த பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார். இந்த பாடலின் முழு வீடியோவும் சில நாட்களுக்கு முன் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் இந்த பாடலை பாராட்டி சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், "என்னுடைய அன்புத்தம்பி சிலம்பரசன் அவர்கள் நடித்து, தமிழ்ப்பேரினத்தின் பெருமைமிகு இசைத்தமிழன் என் ஆருயிர் இளவல் ஏ.ஆர்.ரகுமான் அவர்கள் இசையமைத்து வெளிவந்திருக்கிற 'வெந்து தணிந்தது காடு' படத்தில், என் பாசத்திற்கும் அன்பிற்கும் உரிய அக்கா தாமரை அவர்கள் எழுதி, பாடகி மதுஸ்ரீ அவர்கள் இனிமையான குரலில் பாடியிருக்கின்ற 'மல்லிப் பூ' பாடலை அண்மை நாட்களாக எண்ணற்ற முறை என் பயணங்களிலும், என் ஓய்வு நேரங்களிலும் கேட்டுக்கொண்டே இருக்கிறேன்.
அயலகத்தில் பணிபுரியும் தன் அருமை கணவனை நினைத்து அன்பு மனைவி பாடுவது போல அமைந்திருக்கும் அப்பாடல் வரிகளும், இசை கோர்ப்பும் தனித்துவமாக அமைந்திருப்பது மனதை மயக்குகிறது.
கணவனைப் பிரிந்து இருக்கக்கூடிய பெண்ணின் ஏக்கத்தையும், வலியையும் தன் மென் அழகு தமிழால் அப்படியே வடித்திருக்கின்ற அக்கா கவிஞர் தாமரை அவர்களுக்கும், அவ்வரிகளுக்கு ஆகச்சிறந்த இசையால் உயிரூட்டியிருக்கும் நம் தலைமுறையின் ஈடு இணையற்ற இசைத்தமிழன் அன்பு இளவல் ஏ.ஆர்.ரகுமான் அவர்களுக்கும் எனது பாராட்டுகளும், வாழ்த்துக்களும்..!
உங்கள் பணி தொடரட்டும் தொடரட்டும்.. !
அக்கா தாமரை அவர்களுக்கு இதுபோன்ற மிகச் சிறந்த பாடல்கள் எழுதுவதற்கான வாய்ப்பைத் தொடர்ந்து வழங்கிவரும் இயக்குநர் அன்புச்சகோதரன் கௌதம் மேனன் அவர்களுக்கும், இப்படத்தைத் தயாரித்துள்ள சகோதரர் வேல்ஸ் ஐசரி கணேஷ் அவர்களுக்கும் எனது பேரன்பும், வாழ்த்துகளும்..!" என செந்தமிழன் சீமான் குறிப்பிட்டுள்ளார்.