நடிகர் ராகவா லாரன்ஸ் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், வளர்ந்து வரும் அரசியல் தலைவர் தன்னையும், தனது பொதுநல சேவைகளையும் கொச்சைப்படுத்தும் விதமாக தரக்குறைவாக விமர்சனம் செய்ததாக தெரிவித்திருந்தார். மேலும் அவர் அதை நிறுத்திவிட்ட நிலையில், அவரது தொண்டர்கள் தொடர்ந்து கீழ்த்தரமான முறையில் தனது சமூக வலைதள பக்கங்களில் கருத்து தெரிவிப்பது வருத்தமளிப்பதாக ராகவா லாரன்ஸ் தெரிவித்திருந்தார்.
மேலும் மாற்றுத்திறனாளி நண்பர்களுக்கு தான் செய்யும் சேவைகளையும் அவர்களுக்காக நடத்தும் நிகழ்ச்சிகள் குறித்தும் குறிப்பிட்ட அரசியல் தலைவரின் தொண்டர்கள் தரக்குறைவாக பேசி, அவர்களின் மனதை புண்படுத்துவதாக லாரன்ஸ் பகிரங்கமான குற்றச்சாட்டையும் முன் வைத்துள்ளார்.
ஆனால் இந்த பதிவில் அந்த குறிப்பிட்ட அரசியல் தலைவரின் பெயரை அவர் எங்கும் குறிப்பிடவில்லை. ஆனால் இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த சீமான், லாரன்ஸ் மேல் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. மதிப்பு தான் இருக்கிறது. மாற்றுத்திறனாளி பிள்ளைகளை படிக்க வைக்கிறார். அவரது சேவை மேல் எனக்கு மிகுந்த மதிப்பு உண்டு. யாராவது ஒரு சிலர் விமர்சிருக்கலாம். அது யாரென்று கண்டறிந்து நடவடிக்கை எடுப்போம் என்றார்.
லாரன்ஸை எதிரியாக பார்க்க வேண்டிய தேவையில்லை. ஒரு சிலர் அப்படி பேசியிருக்கலாம். அதற்காக லாரன்ஸ் தம்பியிடம் என்னுடைய வருத்தத்தை தெரிவித்துகொள்கிறேன். அது என்னுடைய கவனத்துக்கு வரவில்லை.
கமல் குறித்து விமர்சனம் செய்ததற்கு பதிலளித்த அவர், மூத்தவர் அவர், அரசியலையும் சினிமா போல் பார்க்கிறார். செட்டு போட்டு பேசி வருகிறார். ஆனால் அப்படி இல்ல. இது ஒரு மிகப்பெரிய களப்பணி. கட்டவண்டி, மிதிவண்டியில் பயணம் செய்து கட்சி வளர்த்த மண் இது. அவர் சொல்வதெல்லாம் நாங்கள் நீண்ட காலமாக முன்வைத்தது தான். பெண்களுக்கு உரிமை, வெளிப்படையான நிர்வாகத்தின் மூலம் ஊழல் லஞ்சத்தை ஒழிப்பேன் போன்றவை எல்லாம் நாங்கள் ஏற்கனவே சொன்னது தான். கமல் எங்களுக்குகாக தான் வாக்கு சேகரிக்கிறார் என்று நெனச்சுக்க வேண்டியது தான் என்றார்.