பிரபல நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர் மயில்சாமி காலமானார். 57 வயது மதிக்கத்தக்க நடிகர் மயில்சாமி, பல தமிழ்ப் படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் பிறந்த நடிகர் மயில்சாமி, மிமிக்கிரி கலைஞராக ஆரம்பத்தில் அறியப்பட்டார்.
1984-ஆம் ஆண்டு முதல் தமிழ் சினிமாவில் சிறு சிறு வேடங்களில் நடித்துவந்த நடிகர் மயில்சாமி, கமல்ஹாசனின் அபூர்வ சகோதரர்கள், ரஜினிகாந்த் நடித்த பணக்காரன் உள்ளிட்ட அக்கால படங்களில் நடித்தார். 2000-ஆம் ஆண்டுக்கு பிறகு நடிகர் விவேக்குடன் இணைந்து பல திரைப்படங்களில் நகைச்சுவை காட்சிகளில் நடித்ததன் மூலம் இன்னும் பிரபலமானார்.
தவிர, காமெடி டைம், டைமுக்கு காமெடி உள்ளிட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய நடிகர் மயில்சாமி, சினிமாவில் இயங்கி வந்தாலும் பொது சேவைகள் செய்வது, மக்களுடன் இணைந்து மக்களுக்காகவும் சில முன்னெடுப்புகளை செய்வது என இயங்கி வந்தார்.
மயில்சாமியின் மறைவு, பிரபலங்கள் மற்றும் சினிமா ரசிகர்கள் அனைவரையும் கடும் வேதனையிலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தி உள்ளது. இந்த நிலையில், மயில்சாமியின் நினைவுகளை நடிகர் சிசர் மனோகர் நம்மிடையே பிரத்தியேகம்க பகிர்ந்து கொண்டார். அதில், "மயில்சாமியிடம் நேற்று காலை 11 மணிக்கு போன் பேசியிருந்தேன். இன்று இப்படி ஒரு தகவலை கேள்வி பட்டால் எப்படி இருக்கும் என்று நினைத்து பாருங்கள்.
அவர் என் எப்படிப்பட்ட நண்பர் என்றால் எனக்கு நெஞ்சு வலி வந்தபோது அவர் கையைப் பிடித்து ஆறுதல் கூறிக் கொண்டிருந்தார்.
ஆம், வசூல்ராஜா எம்பிபிஎஸ் ஷூட்டிங் நேரத்தில் ஒரு கேரக்டருக்காக என்னை அழைக்கிறார்கள். ஆனால் அந்த நேரத்தில் என்னால் தாம்பரம் கடந்து கூட போக முடியவில்லை. நெஞ்சு வலி வந்து விட்டது. அப்போது சன் டிவியில் நிகழ்ச்சி பண்ணிக் கொண்டிருந்தேன். அவர்கள் என்னை ராயப்பேட்டை மருத்துவமனைக்கு செல்ல சொன்னார்கள். இதனால் வசூல் ராஜா பட மேனேஜரிடம் அழைத்து தகவல் சொன்னேன். பிறகு நண்பர்களுக்கு இந்த தகவலை சொல்லி இருந்தேன். ராயப்பேட்டை மருத்துவமனையில் ஒரு ஊசி போட்டு படுக்க வைத்தார்கள். சுயநினைவு இழந்து நான் படுக்கிறேன். ஒரு கட்டத்தில் மெல்ல விழிக்கும் போது என் எதிரிலே ஒருவர் அமர்ந்து கொண்டு இருக்கிறார். அவர் மயில்சாமி... மாப்பிள்ளை கவலைப்படாத.. ஒன்னும் இல்லடா ... நாளைக்கு காலையில வீட்டுக்கு போயிடலாம்டா..என்று என்னை தேற்றிக் கொண்டிருக்கிறார். நண்பர்கள் இல்லை, சொந்த பந்தம் இல்லை, என் நண்பன் ஒருவன் நான் இருக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு உட்கார்ந்து கொண்டிருந்த அந்த நிமிடம் என்னால் வாழ்வில் மறக்க முடியாதது" என்று அழுதபடி பேசியிருக்கிறார்.