கடந்த 2007-ம் ஆண்டு இயக்குநர் தங்கர் பச்சான் இயக்கத்தில் வெளியான படம் "ஒன்பது ரூபாய் நோட்டு". இத்திரைப்படம் உருவாகி 15வது ஆண்டை கொண்டாடும் வகையில் இயக்குநர் தங்கர் பச்சான் ஒரு நெகிழ்ச்சி பதிவை பதிவிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து இப்படம் குறித்து பேசி வீடியோ பதிவிட்ட நடிகர் சத்யராஜ், “‘ஒன்பது ரூபாய் நோட்டு’ எனும் காவியம் வெளியாகி 15 வருடங்கள் ஆகுது. அந்தப் படத்துல நான் மாதவ படையாட்சிங்குற கதாபாத்திரத்தில் நான் நடிக்கல.. வாழ்ந்ததாக எல்லாரும் சொல்லுவாங்க.. ஆனால் அதை வாழவைத்து தங்கர் பச்சானின் கதை திரைக்கதை வசனம் ஒளிப்பதிவு தான். இது அவர் எழுதிய கதையல்ல. அவருக்குள் ஊறுன கதை. மண் சார்ந்த கதை. அவர் கண்முன்னாடி நடந்த ஒரு கதையை அவர் சொன்னா எப்படியிருக்குமோ, அப்படித்தான் படம். படம் பார்த்த உணர்வே இருக்காது.. இந்த நிகழ்ச்சிகள் நடக்கையில் ஓரமாக நின்று வேடிக்கைப்பார்த்த மாதிரி இருக்கும்.
பரத்வாஜ் சாரின் அற்புதமான இசை. வைரமுத்துவின் வைர வரிகள். கூட நடிச்ச அர்ச்சனா, நாசர், ரோகினி எல்லாருமே மிக பிரமாதமா பண்ணிருப்பாங்க. இப்படி ஒரு கதாபாத்திரம் எனக்கு கிடைச்சது மிகப்பெரிய பாக்கியம். பொதுவா நான் நடிச்ச நிரைய படங்களை கலைஞர் கருணாநிதி பார்த்து நிறையா இருந்தாலும், குறையா இருந்தாலும் சுட்டிக்காட்டுவார். இந்தப் படத்தை பார்த்துட்டு, படம் முடிஞ்சும் கலைஞர் எழுந்திருக்கவே இல்லை.. அப்படி உட்கார்ந்து இருந்தார்.
எனக்கு என்னடானு இருந்தது, அவர் பக்கத்துல போய் நின்னேன். அப்படியே அமைதியாக இருந்தார். கையை புடிச்சிட்டாரு.. பாத்தா அவர் கண்களில் கண்ணீர். நானும் கண் கலங்கிவிட்டேன். அவர் எதுவும் பேசாம அமைதியாக இருந்தார். ரொம்ப நேரம் எனக்கு என்ன செய்றதுனே தெரில. ‘என்னை இப்படி அழ வைச்சுட்டியே’ னு சொல்லி கட்டியணைச்சாரு... தங்கர் பச்சானை கட்டியணைச்சு பாராட்டுனாரு.. இப்படியான கலைஞரை நான் பார்த்ததே இல்லை. அவரின் சொல் வளம் எல்லோருக்குமே தெரியும். அது பாராட்டா இருந்தாலும் சரி, குறைகளா இருந்தாலும் சரி அதுல ஒரு அழகான நகைச்சுவை இருக்கும். அப்படிப்பட்ட கலைஞரை கலங்க வைத்த படம் ‘ஒன்பது ரூபாய் நோட்டு’. 15 வருடம் கழித்து மறுபடியும் என் அன்புத்தம்பி தங்கருக்கு என் மனமார்ந்த நன்றிகள்” என தெரிவித்துள்ளார்.