பல முக்கிய திரைப்படங்களை இயக்கியவர் மணிவண்ணன். தமக்கே உண்டான அரசியல் நையாண்டி பாணியில் மணிவண்ணன் இயக்கிய திரைப்படங்கள் இன்றுவரை அனைவராலும் மறக்க முடியாத திரைப்படங்களாக காலத்தை தாண்டி நிற்கின்றன.
இந்த நிலையில்தான் மணிவண்ணனின் நினைவு நாள் நேற்றைய தினம் அனுஷ்டிக்கப்பட்டது. இது குறித்து பேசிய மணிவண்ணனின் நெருங்கிய நண்பரும் அவரது ஆஸ்தான ஹீரோவுமான நடிகர் சத்யராஜ் உருக்கமான ஒரு வீடியோவை பதிவிட்டு இருக்கிறார்.
அதில், “மணிவண்ணனின் நினைவு நாள் இன்று என்று சொல்கிறார்கள். என்னை பொருத்தவரை 365 நாளும் மணிவண்ணனின் நினைவு நாள் தான். என் நண்பன் மணிவண்ணன் இல்லை என்றால் நான் இல்லை. சத்யராஜ் பாணி என்று சொல்கிறார்களே... அது மணிவண்ணன் பாணிதான். அமாவாசை போல் ஒரு கேரக்டரை உருவாக்குவதற்கு நண்பன் மணிவண்ணன் இன்று இல்லை.
ஆனாலும் தமிழ் சினிமாவில் தற்போது விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தில் ‘பெரிய அமைதிப்படை அமாவாசை’ என்று ஒரு வசனம் வரும். இதேபோல் தனுஷ் நடித்து ரிலீஸ் ஆகவிருக்கும் ஜகமே தந்திரம் படத்தில் ‘சோழர் பரம்பரையில் ஒரு லண்டன் தாதா’ என்று சொல்கிறார்.
அந்த அளவுக்கு இன்னும் அனைவரும் மணிவண்ணனை நினைவில் வைத்துக் கொள்வதற்கு லோகேஷ் கனகராஜ்க்கும், விஜய்க்கும், கார்த்திக் சுப்புராஜ்க்கும், தனுஷ்க்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவற்றைப் பார்க்கும்போது எனக்கு மணிவண்ணன் இயக்கத்தில் அம்மாவாசை கேரக்டரில் நான் நடித்த அந்த படப்பிடிப்பு காட்சிகள் நினைவுக்கு வந்து விட்டன!” என்று உருக்கமாக குறிப்பிட்டிருக்கிறார்.