கடந்த 2019-ம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான படம் ‘கோமாளி’.

இப்படத்தை இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி இருந்தார். காஜல் அகர்வால், யோகிபாபு, சம்யுக்தா, கே. எஸ் ரவிக்குமார், பொன்னம்பலம் என பலர் நடித்து இருந்தனர். ஐசரி கணேஷ் தயாரித்த இந்த படத்துக்கு ஹிப்பாப் தமிழா ஆதி இசையமைத்திருந்தார். காமெடி டிராமாவாக உருவான இந்த படத்தை விமர்சகர்களும், ரசிகர்களும் பாராட்டினர். வசூல் ரீதியாகவும் கோமாளி படம் வெற்றியடைந்தது.
இந்நிலையில் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நடிகர் சத்யராஜ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தை AGS நிறுவனம் தயாரிக்கிறது. பிரதீப் ரங்கநாதன் இந்த படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார். கடைசியாக AGS நிறுவனம் 2019 ஆம் ஆண்டு தளபதி விஜய் நடிப்பில் ஸ்போர்ட்ஸ் ஆக்சன் வகைமையில் வெளியான பிகில் படத்தை தயாரித்தது. இந்த படத்தில் நயன்தாரா, அமிர்த அய்யர், வர்ஷா பொல்லம்மா, ஜாக்கி ஷெராஃப் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.
அட்லி இயக்கி இருந்தார். A. R. ரகுமான் இசையமைத்திருந்தார். 'பிகில்' வெளியானதிலிருந்து, சினிமா ரசிகர்கள் AGS நிறுவனத்தின் அடுத்த அறிவிப்பை எதிர்நோக்கி இருந்தனர். சில தினங்களுக்கு முன் ஏஜிஎஸ் தயாரிப்பாளர்கள் தங்களின் அடுத்த அறிவிப்பை வெளியிட்டனர். ‘நாய் சேகர்’ எனும் படத்தை நடிகர் சதீஷை வைத்து எடுப்பதாக அறிவித்தனர். சதிஷ் உடன் குக் வித் கோமாளி பவித்ரா லட்சுமி நடிக்கிறார். சில நாட்களுக்கு முன் நாய் சேகர் படத்தின் முதல் லுக் போஸ்டர், முதல் சிங்கிள் பாடல் வெளியானது. முதல் சிங்கிளை சிவகார்த்திகேயன் எழுத அனிருத் பாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இசையமைப்பாளார் யுவன் சங்கர் ராஜா இந்த பிரதீப் ரங்கநாதனின் புதிய படத்தில் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகி படத்தில் இணைந்துள்ளார். இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக நேற்று டிவிட்டரில் படக்குழு அறிவித்தது. AGS நிறுவனத்தின் 22வது படமாக இந்த படம் உருவாகிறது. இந்த படம் பற்றி AGS தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி டிவிட்டரில் அறிவிக்கும் போது "பல கதைகளை கேட்ட பிறகு இந்த கதையை தேர்வு செய்ததாகவும், இந்த படத்தின் மூலம் பிரதீப் ரங்கநாதனை அறிமுகபடுத்துவதில் மகிழ்ச்சியடைவதாக" தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.