உலகத்தையே உலுக்கி வரும் கொரோனா தொற்று அச்சம் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வரும் நிலையில், இதற்கு ஒரு மருந்தை சீக்கிரம் கண்டுபிடிக்க மாட்டார்களா என்று மக்கள் கவலைப்பட்டு வருகிறார்கள். இதன் பாதிப்பு இந்தியாவில் அதிகரித்து வரும் நிலையில், சினிமா நடிகர்கள், இயக்குனர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் தங்களால் முடிந்த அளவுக்கு ஏழை எளிய மக்களுக்கு உதவி வருகின்றனர்.
ஊரடங்கு உத்தரவால் மக்கள் வெளியே வராமல் இருக்க, பல துறைகள் பாதிப்படைந்துள்ளன. அதிலும் விவசாயிகளின் பிரச்னைகளை சொல்லில் அடங்காது. விவசாய மக்களுக்கு இந்த தடை உத்தரவை அரசு கடுமைப்படுத்தாவிட்டாலும் அவர்களால் சாதாரணமாக இயங்க முடியவில்லை. உற்பத்தி செய்த பொருட்களை சரிவர விற்பனை செய்ய முடியாத நிலையும் நிலவி வருவதால் வெவ்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில் சமீபத்தில் மதுரையைச் சேர்ந்த விவசாயி கோபாலகிருஷ்ணன் இணையத்தில் ஒரு வீடியாவை வெளியிட்டிருந்தார். அதில் அவர் தன் வாழைத் தோட்டத்தின் வீடியோவை வெளியிட்டு, இருந்தார். அந்த வீடியோவைப் பார்த்த முன்னாள் பத்திரிகையாளரும், கத்துக்குட்டி என்ற படத்தின் இயக்குனருமான இரா.சரவணன் தனது ட்விட்டரில் அதனை வெளியிட்டு, "வெளிநாட்டு வாழ்க்கை வேணாம்னு துபாய்ல இருந்து ஊருக்கு வந்து, இந்த வருஷம் 3.5 ஏக்கர் வாழை போட்டேன். தார் வெட்டுற பருவம். நல்லா விளைஞ்சு நிக்குது. ஆனா வெட்ட வழியில்லை. நட்டாத்துல நிக்கிறேன். யாராவது உதவுங்களேன்" எனக் கதறுகிறார் மதுரை, மீனாட்சிபுரத்தை சேர்ந்த விவசாயி கோபாலகிருஷ்ணன்’’ என்று குறிப்பிட்டிருந்தார்.
இரா.சரவணனின் இந்த ட்வீட்டைப் பார்த்த இயக்குனர் மற்றும் நடிகரான சசி குமார் உடனடியாக அந்த விவசாயிக்கு 25 ஆயிரம் ரூபாய் அனுப்பி உதவி செய்துள்ளார். இதனால் மனம் நெகிழ்ந்த கோபாலகிருஷ்ணன், ‘சசி சார் உதவியா கொடுத்தாலும், அதை கடனா நினைச்சு, அடுத்த சாகுபடியில் நிச்சயம் அவருக்கு திருப்பிக் கொடுப்பேன்’ என்று கோபாலகிருஷ்ணன் கூறியிருப்பதை இரா.சரவணன் சசிகுமாருக்கு நன்றி தெரிவிக்கும் ட்வீட்டில் வெளியிட்டிருந்தார்.
இந்த நற்செயல்களை நெட்டிசன்கள் பாராட்டத் தவறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.