பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, துஷாரா விஜயன், பசுபதி, ஜான் விஜய், கலையரசன் மற்றும் பலர் நடித்து அமேசான் பிரைம் வீடியோவில் நேரடியாக வெளியாகியிருக்கும் திரைப்படம் சார்பட்டா பரம்பரை.
மெட்ராஸ் குத்துச்சண்டை மரபை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் ஆர்யா தன்னுடைய உடலை குத்துச்சண்டை வீரருக்கான உடலாக கடுமையான உழைப்பைக் கொட்டி மாற்றியுள்ளார். கதையை பொருத்தவரை சார்பட்டா பரம்பரையை பல ஆண்டுக்கு பின் வெற்றி பெற வைப்பதற்காக பலருடன் மோதி, இறுதியில் வேம்புலி எனும் முக்கியமான வில்லனுடன் மோதி ஆர்யா ஜெயிக்கிறாரா? இல்லையா? என்பது தான் மீதி கதை.
அதற்கிடையில் அவர் ஒரு அருமையான கேரக்டருடன் மோத வேண்டியது இருக்கும். அதுதான் டான்சிங் ரோஸ். நளினமும் நடனமும் குத்துச் சண்டையும் என ஆச்சர்யத்தில் உறைய வைக்கக்கூடிய இந்த கேரக்டரில் நடித்த ஷபீர் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
இதுகுறித்து அவர் பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பிரத்தியேகமாக அளித்த பிரத்யேக பேட்டியில், “இந்த படத்துக்காக முதலில் பேசப்பட்ட போது நான் வேறு ஒரு பட சூழலில் இருந்தேன். அப்போது நான் வெயிட் போட வேண்டும் என்று சார்பட்டா படக்குழுவினர் சொன்னார்கள். அதனால் இந்த படம் பண்ண முடியாதோ என்று நினைத்தேன். பிறகு ரஞ்சித் அண்ணாவை சந்தித்தபோதும், படக்குழுவினரை சந்தித்தபோதும் உற்சாகமாகினேன். இந்த படத்தில் கடைசியாக கையெழுத்திட்டது நான் தான். ஒத்திகையே பார்க்கவில்லை.
அன்பறிவ் மாஸ்டர்கள் எனக்கு முழு சுதந்திரம் அளித்து, அந்த டான்சிங் ரோஸ் கேரக்டருக்கு, நான் என்ன எல்லாம் புதுமையைப் புகுத்தி செய்ய முடியுமோ அதை அனுமதித்தார்கள். அதை அவர்கள் என்கரேஜ் செய்தார்கள். மக்கள் இந்த கேரக்டரை எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்பதை விட நான் இந்த கேரக்டரை எந்த அளவுக்கு சரியாக கொண்டு வர போகிறேன் என்பதுதான் என் மனதில் இருந்தது.
படக்குழுவினர், ரஞ்சித் அண்ணன் என எல்லாருமே இந்த கேரக்டர் பற்றி முன்பே மிகவும் அற்புதமாக பேசினர். படம் வெளியான பிறகு இந்த கேரக்டருக்கு நல்ல ரெஸ்பான்ஸ் தற்போது வந்துகொண்டிருக்கிறது. தவிர வடசென்னை ஸ்லாங்கில் பேசுவது கஷ்டமாக இருக்கிறது. இருந்தாலும் வசனகர்த்தா தமிழ்ப் பிரபா உள்ளிட்டோர் உதவியுடன் நானே டப்பிங் பேசினேன்.
கபிலன் கேரக்டராக வரும் ஆர்யாவை, வெறுப்பேற்றும் டான்சிங் ரோஸ் கேரக்டரை நான் எனக்கு தகுந்தாற்போல் இம்ப்ரூவ் பண்ணிக் கொண்டேன். அதற்கு முன் பிரபல குத்துச் சண்டை வீரர் நசீப் ஹமீத் வீடியோக்களை பார்க்கச் சொல்லி இயக்குநர் கொடுத்தார். இந்த படத்தில் நான் கையெழுத்திட்டு இரண்டு வாரம்தான் நேரம் இருந்தது. அந்த இரண்டு வாரத்திலும் சில நாட்கள் நான் பயணத்தில் இருந்தேன். ஆர்யா மிகவும் அற்புதம். பாண்டிச்சேரி ஷூட்டிங்கிற்காக 100 கிலோமீட்டர் சைக்கிளிலேயே பயணம் செய்தார். அவர் கபிலன் எனும் கேரக்டரில் நடித்திருக்கிறார்.
அவருக்கு அவருடன் சண்டை போடும் இந்த டான்சிங் ரோஸ் கேரக்டர் நிச்சயமாக எப்போதும் எதிரில் இருப்பவர்களின் தன்னம்பிக்கையைக் குலைத்து, தனக்கு தானே தன்னம்பிக்கையை கொடுத்துக் கொள்ளும் ஒரு கேரக்டர் என்றுதான் நான் மனதில் நிறுத்திக் கொண்டேன. உண்மையில் நான் நினைத்ததை விடவும் டெக்னிகலாக அதில் நிறைய வேலைகள் இருந்தன. திரு சார் எனக்கு அதைச் சொல்லிக் கொடுத்தார். அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.
இதேபோல் ரஜினி நடித்த பேட்டை திரைப்படத்தில் தலைவருடன் எந்த கதாப்பாத்திரமாக இருந்தாலும் பரவாயில்லை நடிப்பேன் என்று கார்த்திக் சுப்புராஜ் அவர்களை நான் பின்தொடர்ந்தேன். அப்போது தலைவருடன் ஒரு ஃபைட் காட்சியே பண்ணும் அளவுக்கான கேரக்டர் கொடுத்தார்கள். அதை நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை” என்று சிலாகிக்கிறார் நம் டான்சிங் ரோஸ் ஷபீர். அவர் பேசும் முழு பேட்டி வீடியோவை இணைப்பில் காணலாம்.