ஐத்ராபாத்: சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடிப்பில் வெளியாக உள்ள புதிய படத்தின் புது ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கில் ராஷிகா, விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளிவந்த 'கீதா கோவிந்தம்' படத்தை தொடர்ந்து `சர்காரு வாரி பாட்டா' படத்தை இயக்குனர் பரசுராம் இயக்குகிறார். இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ், 14 ரீல்ஸ் பிளஸ் மற்றும் மகேஷ்பாபு என்டர்டெய்ன்மெண்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.
இதில் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். 'சர்காரு வாரி பாட்டா' படம் வங்கி மோசடியை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வருவதாக தெலுங்கு சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சென்ற வருடம் இந்தப் படத்துக்கான மோஷன் போஸ்டர் ரிலீஸ் செய்யப்பட்டது.
சென்ற ஜூலை 31ம் தேதி இந்த படத்தின் முதல் பார்வை போஸ்டர் ரிலீஸ் செய்யப்பட்டது. பின் மகேஷ்பாபு பிறந்தநாளை முன்னிட்டு டீசர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தின் முதல் சிங்கிள் ரொமாண்டிக் பாடல் பிப்ரவரி 14 அன்று காதலர் தினத்துக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார். மதி ஒளிப்பதிவு செய்கிறார். மார்த்தாண்ட கே வெங்கடேஷ் எடிட்டராகவும், ஏஎஸ் பிரகாஷ் கலை இயக்குநராகவும் பணிபுரிகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத் பகுதிகளில் நடந்தது.
இந்த படத்தை 2022 பொங்கல் மஹாசங்கராந்திக்கு வெளியிட படக்குழு முடிவு செய்திருந்தது. ஆனால் இதே பொங்கல் 2022 அன்று ராதே ஷ்யாம், RRR, வலிமை, பீம்லா நாயக் போன்ற பெரிய படங்கள் வெளியாவதால் படத்தின் வெளியீடு ஏப்ரல் 1,2022 அன்று ஒத்திவைக்கப்பட்டது. பொங்கலுக்கும் வெளியாக வேண்டிய படங்கள் மார்ச் மாதத்துக்கு சென்றுள்ளதால் இந்த படத்தின் வெளியீடு மே 12க்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனை பிரத்யேக புதிய போஸ்டர் மூலம் படக்குழு அறிவித்துள்ளது.