சென்னை, 09 பிப்ரவரி 2022:- ஓடிடி தளங்களில் திரைப்படங்களை போலவே வெப் சீரிஸ்களு முதன்மையாக வெளியாவதையும், அவற்றுக்கு நல்ல வரவேற்பு இருப்பதையும் காணமுடிகிறது.
இரை - வெப் தொடர்
அப்படி தமிழிலும் வெப் சீரிஸ்களுக்கான நல்ல வரவேற்பு இருந்துகொண்டு இருக்கிறது. இந்த நிலையில்தான் ராதிகா சரத்குமாரின் ராடான் மீடியா வொர்க்ஸ் தயாரிக்கும் ‘இரை’ எனும் வெப் சீரிஸ் தற்போது ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ராடான் மீடியா தயாரிப்பு
ராதிகா சரத்குமாரின் Radaan Mediawoks நிறுவனம், கடந்த பல வருடங்களாக தமிழக பொழுதுபோக்கு துறையில், பல அரிய சாதனைகளை பல்வேறு தளங்களில் நிகழ்த்தி காட்டியிருக்கிறது. குடும்ப பெண்கள் கொண்டாடும் தொலைக்காட்சி சீரியல்களில் தொடங்கி, டெலிஃபிலிம் மற்றும் முழு நீள திரைப்படங்கள் வரை பல வெற்றிகரமான படைப்புகளை தயாரித்து வழங்கியுள்ளது.
இந்நிறுவனத்தின் தயாரிப்பில் தற்போது OTT தளத்தில் “இரை” எனும் இந்த வெப் சீரிஸ் ஒளிபரப்பாகவுள்ளது. நடிகர் சரத்குமார் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள இந்த சீரிஸின் படப்பிடிப்பு கடந்த 5, ஜூலை, 2021-ல் பூஜையுடன் துவங்கியது. இயக்குநர் ராஜேஷ்.எம்.செல்வா இந்த வெப் தொடரை இயக்கியுளார்.
இயக்குநர் ராஜேஷ் எம். செல்வா
கடந்த 2015ஆம் ஆண்டு, கமல்ஹாசன், பிரகாஷ்ராஜ், த்ரிஷாவை வைத்து தூங்காவனம் படத்தை இயக்கிய ராஜேஷ் எம் செல்வா, பின்னர் விக்ரம் நடித்து 2019ஆம் ஆண்டு வெளிவந்த கடாரம் கொண்டான் படத்தையும் இயக்கினார். இவர் விஸ்வரூபம் படத்தில் தீவிரவாதியாகவும், மற்றும் உத்தம வில்லன் படத்தில் ஸ்பையாகவும் (spy) நடித்திருந்தார்.
ரிலீஸ் தேதி அறிவிப்பு
இந்நிலையில் ராஜேஷ்.எம்.செல்வா இயக்கத்தில் சரத்குமார் நடித்திருக்கும் புதிய வெப் தொடர் குறித்த ரிலீஸ் அறிவிப்பை நடிகை தாப்சி உள்ளிட்ட பலரும், தங்களது சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். அதன்படி ஆஹா எனும் பிரபல ஓடிடி தளத்தில் இரை வெப் சீரிஸ் வரும் பிப்ரவரி 18-ஆம் தேதி நேரடியாக ஒளிபரப்பாவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ராபர்ட் வாசுதேவனின் வெறியாட்டம்
இந்தத் தொடரில் முன்னணி கதாபாத்திரத்தில் சரத்குமார் நடிக்கும் கேரக்டருக்கு ராபர்ட் வாசுதேவன் என பெயரிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. இது தொடர்பாக ஆஹா ஓடிடி தமது அறிவிப்பில், “ராபர்ட் வாசுதேவனின் வேட்டை ஆரம்பம்” என பதிவிட்டுள்ளது. இந்த இணைய தொடருக்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார். யுவராஜ் ஒளிப்பதிவு செய்துளார். சசி கலை இயக்கத்தை கவனித்துக்கொள்ள, சில்வா மாஸ்டர் சண்டைப் பயிற்சிகளை அளித்துள்ளார். ஷான் லோகேஷ் படத்தொகுப்பு செய்துள்ளார்.
இதனிடையே இந்த படத்தின் டீசரை நடிகர் ஜெயம் ரவி வெளியிடும் அறிவிப்பும் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.