பிரபல ஒளிப்பதிவாளராக இருந்து திரைப்படங்களை இயக்கியவர் சந்தோஷ் சிவன்.
முன்னணி இயக்குநர்களுக்கும் முன்னணி நடிகர்களின் படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்த சந்தோஷ் சிவன் இனம் என்கிற ஒரு திரைப்படத்தை லிங்குசாமி தயாரிப்பில் தமிழில் இனம் என்கிற பெயரிலும் மற்ற மொழிகளில் Ceylon என்கிற பெயரிலும் இயக்கி ஒளிப்பதிவு செய்து வெளியிட்டுருந்தார். சிலோன் வாழ் மக்களின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம் திரையரங்கில் வெளியாகி சில நாட்கள் மட்டுமே ஓடியது.
பின்னர் பல்வேறு பிரச்சனைகளால் இந்த திரைப்படம் திரையரங்குகளில் நீடிக்க முடியாமல் போனது. எனினும் இந்த திரைப்படத்தின் காட்சி மொழியும் ஒளிப்பதிவும் விமர்சகர்களால் பெரிதளவில் பாராட்டப்பட்டன. இதனிடையே கொரோனா ஊரடங்கால் திரையரங்குகள் மூடப்பட்டதை அடுத்து தற்போது பல திரைப்படங்கள் நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியாகின்றன.
அத்துடன் ஏற்கனவே திரையரங்குகளில் வெளியான கர்ணன் உள்ளிட்ட திரைப்படங்கள் மீண்டும் ஓடிடி தளங்களில் வெளியாகின்றன. அந்த வகையில் காவல்துறை உங்கள் நண்பன் திரைப்படம் Zee5லும், தனுஷின் கர்ணன் திரைப்படம் மே 14ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்திலும் வெளியாகி இருக்கின்றன.
இந்த நிலையில்தான் இயக்குநனர் மற்றும் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இனம் திரைப்படத்தை ஓடிடியில் வெளியிடலாமா? முதலில் அந்த படத்தை பார்ப்பதற்கு யார் விரும்புகிறீர்கள்? உங்களுடைய கருத்துக்களை சொல்லுங்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார். இவருடைய இந்த ட்வீட்டுக்கு பலரும் உற்சாகமாக பதில் கமெண்டுகளை கொடுத்து வருகின்றனர்.