1970 காலகட்டத்தில் வட சென்னையில் நடைபெறும் குத்துச்சண்டை பின்னணி சம்பவங்களின் தொகுப்பாக 'சார்பட்டா பரம்பரை' திரைப்படம் ஆர்யா நடிப்பில், பா. ரஞ்சித் இயக்கத்தில் ஜூலை 22ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகி ரசிகர்கள் மத்தியிலும் விமர்சகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்று பாராட்டுகளை குவித்தது.
இந்த படத்தில் தோன்றிய கபிலன், டான்சிங் ரோஸ், வேம்புலி, மாரியம்மா, லெட்சுமி, ரங்கன் வாத்தியார், கெவின் டாடி, ராமன் உள்ளிட்ட பல கதாபாத்திரங்களை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதில் ராமன் பாத்திரத்தில் நடிகர் சந்தோஷ் பிரதாப் நடித்து இருந்தார்.
இந்த ராமன் கதாபாத்திரத்தை தொடர்ந்து தற்போது மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு-2 படத்தில் நடித்து முடித்துள்ளார். அதனைத்தொடர்ந்து சந்தோஷ் பிரதாப் நடிக்கும் புதிய படம் பற்றிய நம்பத்தகுந்த தகவல்கள் கிடைத்துள்ளது.
இந்த புதிய படத்தை நடன இயக்குனர் பாபி இயக்குகிறார். ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பாக சுஜாதா விஜயகுமார் தயாரிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபர் 8 முதல் துவங்க உள்ளது. இந்த படத்தில் சந்தோஷுக்கு ஜோடியாக ஆண்ட்ரியா நடிக்கவுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆண்ட்ரியா ஏற்கனவே தல அஜித்துடன் மங்காத்தா (Mankatha), விஜய்யுடன் மாஸ்டர் (Master), தனுஷுடன் வடசென்னை (Vada Chennai) படத்தில் நடித்துள்ளார். தற்போது மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு-2 படத்தில் நடித்து முடித்துள்ளார். இயக்குனர் வெற்றிமாறன் தயாரிக்கும் புதிய படத்திலும் நடிக்க உள்ளார்.