சார்பட்டா பரம்பரை, ஓ மை கடவுளே படங்களில் நடித்த நடிகர் சந்தோஷ் பிரதாப் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் படம் "கதிர்".
இந்த படத்தில் புதுமுக கதாநாயகனாக வெங்கடேஷ் நடிக்கிறார், கதாநாயகியாக பாவ்யா நடிக்கிறார். துவாரகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை இயக்குநர் தினேஷ் பழனிவேல் இயக்கியுள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் மலையாள நடிகை ரஜினி சாண்டி நடித்துள்ளார். இவர் தமிழில் அறிமுகமாகும் முதல் படம் இதுவாகும்.
இந்த படத்திற்கு தேசிய விருது பெற்ற ‘பாரம்’ படத்தின் ஒளிப்பதிவாளர் ஜெயந்த் சேது மாதவன் ஒளிப்பதிவு செய்கிறார். ‘அங்கமாலி டைரீஸ்’, ‘ஜல்லிக்கட்டு’ படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் பிரசாந்த் பிள்ளை இசையமைக்கிறார்.
இந்தத் திரைப்படத்தின் போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தன. இந்நிலையில் இந்த படத்தின் டீசரை நடிகர் சிவகார்த்திக்கேயன் வெளியிட்டுள்ளார். இரண்டு வெவ்வேறு காலக்கட்டத்தில் கதாநாயகன் வெங்கடேஷ்- பாவ்யா தோன்றும் நிகழ்கால கதையும், சந்தோஷ் பிரதாப் தோன்றும் (ரஜினி சாண்டியின் பிளாஸ்பேக்) கதையும் என இரண்டு காலகட்டத்தில் கதை பயணிப்பது போல் டீசர் உள்ளது.
இந்த டீசரின் சிறப்பம்சமாக டீசரின் பாடலும், பிளாஸ்பேக் பகுதி ஒளிப்பதிவும் அமைந்துள்ளன. 1970களில் நக்சல்பரி மார்க்சிய லெனினிய கம்யூனிச அமைப்பின் தொடக்கநிலையை பிளாஸ்பேக் காட்சிகளில் தத்ரூபமாக கொண்டு வந்துள்ளனர்.