தமிழ் சினிமா கண்ட சிறந்த நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் வடிவேலு.
சமீப காலமாக, திரைப்படங்களில் நாம் அவரை அதிகமாக பார்க்க முடியவில்லை என்றாலும், நாட்டில் என்ன விஷயம் நடந்தாலும், அதற்காக பகிரப்படும் மீம்ஸ்களில் நிச்சயம் வடிவேலு இடம்பெற்றிருப்பார்.
இதுவரையிலான திரைப்பயணத்தில், வடிவேலு செய்த முக பாவனைகள், நடன அசைவுகள் என அனைத்தும், எப்படிப்பட்ட பிரச்சனைகளை பகிரும் மீம்ஸ் ஆனாலும், நாம் அதனை தொடர்புபடுத்திக் கொள்ளலாம்.
அந்த அளவுக்கு, இன்றைய காலத்து இளைஞர்கள் மத்தியிலும் அதிகம் பிரபலம் ஆனவர் வடிவேலு. கடைசியாக மெர்சல் மற்றும் சிவலிங்கா ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்த வடிவேலு, சுமார் ஐந்து ஆண்டுகளாக எந்த திரைப்படத்திலும் நடிக்கவில்லை.
நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்
இதனைத் தொடர்ந்து, இயக்குனர் சுராஜ் இயக்கத்தில், 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' என்ற திரைப்படத்தில் நாயகனாக வடிவேலு நடித்து வருகிறார். சுராஜ் இயக்கியிருந்த 'தலைநகரம்' என்னும் திரைப்படத்தில், 'நாய் சேகர்' என்னும் கதாபாத்திரத்தில் வடிவேலு தோன்றியிருப்பார். இன்றளவிலும், அந்த படத்தில் வடிவேலு பேசும் வசனங்களும், அவரின் காமெடி பாவனைகளும் மக்கள் மத்தியில் சிரிப்பலையை ஏற்படுத்தும்.
சந்தோஷ் நாராயணன்
அப்படிப்பட்ட புகழ்பெற்ற 'நாய் சேகர்' என்ற பெயரை புதிய படத்தின் தலைப்பிலும் படக்குழு பயன்படுத்தியுள்ளது. வடிவேலுவுடன், நடிகை சிவானி முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்து வருகிறார். மேலும், இந்த படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
ஆவலுடன் ரசிகர்கள்
நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் பர்ஸ்ட் லுக் ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்தது. இதில், சில நாய்களுடன், மிகவும் வித்தியாசமான ஹேர் ஸ்டைலுடன் வடிவேலு இருக்கும் புகைப்படங்களும் அதிகம் வைரலாகி வந்தது. காமெடி அம்சம் கொண்ட கதையாக இருக்கும் என்பதால், வடிவேலுவின் கம்பேக்கிற்கு வேண்டி, சினிமா ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
புதிய வீடியோ
இந்நிலையில், 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' திரைப்படம் பற்றி, வீடியோ ஒன்றை சந்தோஷ் நாராயணன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதில், நடிகர் வடிவேலு பாடும் வகையில் இருக்கும் நிலையில், 'லெஜண்ட் தன்னுடைய இசையால், நம்மை மயக்கப் போகிறார்' என சந்தோஷ் நாராயணன் குறிப்பிட்டுள்ளார். வடிவேலு பாடுவது தெரிந்தாலும், பின்னணியில் வேறு பாடல் ஒலிப்பதால், அவர் பாடுவது கேட்கவில்லை. மேலும், வடிவேலு பாடிக் கொண்டே செய்யும் வேடிக்கையான பாவனைகளும் இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன.
நடிகர் வடிவேலு பாடும் பாடல்கள், மிகவும் ஜாலியாக அதே வேளையில் அசத்தலாகவும் இருக்கும். தற்போது, சந்தோஷ் நாராயணன் இசையில் வடிவேலு பாடவுள்ளதால், பாடல் எப்போது வெளிவரும் என்பதை தற்போதே எதிர்நோக்கி வருகின்றனர்.