ஆர்.கே.என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், நடிகர் சந்தானம் நடித்துள்ள திரைப்படம் ‘சபாபதி’. திக்கு வாயால் தன் வாழ்க்கையில் சந்திக்கும் சிக்கல்களில் இருந்து ஒருவர் மீண்டு வரும் மையக்கருதான் இப்படத்தின் ஒன்லைன். நடிகர் சந்தானம், திக்கு வாயால் அவதிப்படும் வாலிபராக நடித்துளார்.
ஆர்.ஸ்ரீநிவாச ராவ் இயக்கியுள்ள இந்த படம் நகைச்சுவை கலந்த ஃபேண்டஸி திரைப்படமாக உருவாகியுள்ளது. இப்படத்தில் நடிகர் சந்தானத்துடன் இணைந்து எம்.எஸ்.பாஸ்கர், பிரீதி வர்மா, சாயாஜி ஷிண்டே, ‘விஜய் டிவி’ புகழ், சுவாமிநாதன், ‘காமெடி பஜார்’ மாறன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் டிரைலர் அண்மையில் வெளியானது. இதில் பிரபல் நகைச்சுவை பட்டிமன்ற பேச்சாளர் மதுரை முத்து இடம் பெறும் காட்சிகளும் அடங்கியிருந்தன. பாஸ்கர் ஆறுமுகம் இப்படத்துக்கு ஒளிப்பதிவை கவனிக்க, படத்தொகுப்பை லியோ ஜான் பால் கையாண்டுள்ளார். சாம் சி.எஸ் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார். இப்படத்தின் சண்டைக் காட்சிகளை ஹரி தினேஷ் வடிவமைத்துள்ளார்.
இந்நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகர் புகழ், இப்படத்தில் நடித்தது குறித்து நடிகர் சந்தான, சபாபதி பட பிரஸ் மீட்டில் பேசியிருந்தார். அதில், “சபாபதி திரைப்படத்தில் திக்குவாய் என்கிற ஒரு விஷயத்தால் சிரமப்படும் இளைஞர் பற்றிய கதையை காமெடியாக கூறியிருக்கிறோம். எனினும் அந்த கேரக்டரால் எவ்வளவு காமெடி பண்ண முடியுமோ அந்த அளவுக்கு இருக்கும்.
இதில் ரமணி எனும் கதாபாத்திரமாக புகழை நீங்கள் பார்க்கலாம். அவரை நீங்கள் குக் வித் கோமாளியாக நீங்கள் இப்படத்தில் பார்க்க வேண்டியதில்ல. படத்திலும் சந்தானம் - புகழ் காம்போ, என்கிற அளவுக்கு எதிர்பார்ப்பை கொண்டிருக்க வேண்டியதில்லை.
இதில் கதாபாத்திரங்கள் வலுவாக அமைக்கப்பட்டிருக்கின்றன.
கேரக்டராக பார்த்தால் புகழ் அவருடைய சிறப்பை கொடுத்திருக்கிறார். அவர் மிகவும் திறமையானவர். அவருக்கு இப்படத்தை தாண்டி, அடுத்தடுத்த படங்களில் அவருடன் இணைய வாய்ப்பு இருக்கும்போது இன்னும் அவருக்கான சரியான கதாபாத்திர கட்டமைப்புடன் அவருடன் இணைந்து நடிக்க ஆசைப்படுறேன்!” என்று நடிகர் சந்தானம் குறிப்பிட்டுள்ளார்.
நவம்பர் 19-ஆம் தேதி, திரையரங்குகளில் வெளியாகும்‘சபாபதி’ திரைப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமத்தை கலர்ஸ் டிவி கைப்பற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.