பிக்பாஸ் நிகழ்ச்சி 78 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சிக்கு உலகம் முழுவதும் தமிழர்கள் ரசிகர்களாக இருக்கின்றனர்.

நடிகர் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சியிலிருந்து ஒரு டைட்டில் வின்னர் இறுதியாக தேர்ந்தெடுக்கப்பட போகிறார். தற்போது பிக்பாஸ் வீட்டில் இருக்கும் 10 போட்டியாளர்கள் கிராண்ட் ஃபினாலே என்கிற ரேஸில் ஈடுபட்டிருக்கின்றனர்.
இந்த நிகழ்ச்சியில் சுமார் 50 நாட்களுக்கு பின் வைல்டு கார்டு என்ட்ரி போட்டியாளராக வந்தவ நடிகர், தொகுப்பாளர் மற்றும் நடிகர் விஜய்யின் நண்பர் சஞ்சீவ். இவர் தமது அக்காவின் மரணம் குறித்து பிக்பாஸ் வீட்டுக்குள் தற்போது கூறியிருக்கிறார்.
அதில், “நான் பிறந்தது சென்னை தான். ஒரு மகிழ்ச்சியான குடும்பம். வீட்டில் நானும் அக்காவும் தான். ஐந்தாம் வகுப்பு வரை 5 பேர் கொண்ட நண்பர்கள் குழுவாக இருந்தோம். பிறகு லயோலா கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் படிக்கும் பொழுது நடிகர் விஜய் எங்களுடன் இணைய, நாங்கள் 6 பேர் நண்பர்களாக ஆனோம்.
எனது அக்காதான் முதலில் நடிக்கத் தொடங்கினார். நடிக்கும்போது அவர் தன் பெயரை சிந்து என பெயர் மாற்றிக்கொண்டார். மஞ்சுளா ஆண்டி மற்றும் விஜயகுமார் அங்கிள் உள்ளிட்டோர் எங்களுக்கு சொந்தகாரர்கள். அவர்களின் ஊக்கம் தரும் பேச்சால், சினிமாவில் நடிக்க ஆசை வந்து, நான் விஜய் நடித்த நிலாவே வா திரைப்படத்தில் விஜய்யின் நண்பராக நடித்தேன்.
பின்னர் அக்கா நடித்த டெலிவிஷன் சீரியலில் வில்லனாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அக்காவுக்கு திருமணம் ஆகி, விவாகரத்து நடந்து அவருக்கு ஒரு மகள் இருந்தாள். அக்காவுக்கு வீசிங் பிரச்சினை இருந்தது. அப்போது சாப்பிட உட்காரும் பொழுது அக்காவுக்கு வீசிங் வருவதாய் செய்கை காட்டினாள். அது அவளுக்கு எப்போதும் வருவதுதான், அதனால் மூச்சு இழுக்கும் கருவியை வைத்து மூச்சு இருக்கச் சொல்லிவிட்டு நானும் என் நண்பரும் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம்.
திடீரென அக்கா எதிர்பாராத விதமாய் மயக்கம் ஆகிவிட்டாள். உடனே அவளது தோழிகளின் உதவியுடன் மருத்துவமனை அழைத்துச் சென்றோம். அன்று காலையில் அழகாக பிளாக் அண்ட் பிளாக்கில் அக்காவை பார்த்த எனக்கு மருத்துவமனையில் காத்திருந்தது அதிர்ச்சி. அந்த திரைச்சீலையை விலக்கி பார்த்ததும் துணி இல்லாமல் இருந்தார் அக்கா. அவருடைய நெஞ்சில் ஒரு கருவியை வைத்து, சினிமாவில் வருவது போல் பம்ப் செய்து, அவளை காப்பாற்ற முயற்சி செய்து கொண்டிருந்தார்கள்.
அடுத்த 3 நாட்களில் அக்கா மரணம் அடைந்தார். மொத்த குடும்ப பாரமும் என் மேல் விழுந்தது. அப்போது நான் ஒரு நாளைக்கு 2000 ரூபாய் சீரியலில் சம்பாதித்தேன். என் அக்காவை எரிக்கும் போது கடைசியாக நான் சொன்னது, அவள் மகளை நான் காப்பாற்றி விடுவேன்.. கவலைப்படாதே! என்பதுதான்.” என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய சஞ்சீவ், விஜய்யின் 30 ஆண்டுகால ஆழமான நட்பு, தன் மனைவியின் சப்போர்ட், இருந்து அடுத்த கட்டமாக பிக்பாஸ் மூலம் கிடைக்கும் உற்சாகத்தை கொண்டு மேலும் பல படங்களில் நடிக்கும் இலக்கு உள்ளிட்டவற்றை தெரிவித்தார்.