தென் இந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் சமந்தா.
தமிழ், தெலுங்கு மொழிகளில் ஏராளமான திரைப்படங்கள் நடித்துள்ள சமந்தாவுக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம்.
கடைசியாக, விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா ஆகியோருடன் இணைந்து நடித்திருந்த "காத்துவாக்குல ரெண்டு காதல்" திரைப்படம், சமந்தா நடிப்பில் வெளியாகி இருந்தது.
இதனைத் தொடர்ந்து, யசோதா, ஷகுந்தலம், குஷி உள்ளிட்ட திரைப்படங்களிலும் சமந்தா நடித்து வருகிறார். இதில், யசோதா படத்தின் டிரைலரும் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமந்தா பகிர்ந்துள்ள விஷயம் அதிகம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அந்த பதிவில், "யசோதா ட்ரைலருக்கு நீங்கள் கொடுத்த வரவேற்பு அமோகமாக இருந்தது. உங்கள் அனைவருடனும் நான் பகிர்ந்து கொள்ளும் அன்பும், பிணைப்பும் தான் முடிவில்லாத சவால்களை சமாளிக்கவும் எனக்கு வலிமை தருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன், Myositis என்ற நோய் எனக்கு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதற்கு நிவாரணம் கிடைத்த பின் உங்களுடன் பகிரலாம் என எதிர்பார்த்தேன். ஆனால், நான் நினைத்ததை விட அதற்கு சிறிது நேரம் எடுத்துக் கொள்ளும். நம்மை எப்போதும் வலுவாக முன்னிறுத்த வேண்டிய அவசியம் இல்லை என்பதையும் நான் மெல்ல உணர்கிறேன். நான் விரைவில் பூரண குணமடைவேன் என மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். உடல் ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும் நான் நல்ல நாட்கள் மற்றும் கெட்ட நாட்கள் என அனைத்தையும் பார்த்து விட்டேன்.
இன்னும் ஒரு நாளை இதன் மூலம் என்னால் கையாள முடியாது என நினைக்கும் போது எப்படியோ அந்த தருணம் கடந்து சென்று கொண்டே இருக்கிறது. நான் குணமடைய இன்னும் ஒரு நாள் நெருங்கி விட்டேன் என்ற அர்த்தமாக இருக்கும் என நினைக்கிறேன். லவ் யூ" என குறிப்பிட்டுள்ளார்.