ஹிந்தியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை பிரபல பாலிவுட் ஹீரோ சல்மான்கான் தொகுத்து வழங்கி வருகிறார்.
தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்தது. இதுவரை 5 சீசன்கள் முடிவடைந்து இருக்கிறது. இந்த தமிழ் நிகழ்ச்சியை நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கி வந்திருந்தார். இடையில் நடிகை ரம்யா கிருஷ்ணன் மற்றும் நடிகர் சிம்பு ஆகயோர் தொகுத்து வழங்கினர். இதனை தொடர்ந்து தமிழிலும் பிக் பாஸ் நிகழ்ச்சி ஓடிடியில் வர தொடங்கியது. தற்போது பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் வரவிருப்பதற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
இதே போல் ஹிந்தியில் 16வது சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டிருக்கிறது. ஹிந்தியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியை சுமார் 12 ஆண்டுகளாக சல்மான் கான் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிலையில் ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியின் 16-வது சீசனையும் தொகுத்து வழங்குவதற்கு சல்மான்கான் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். முன்னதாக இந்த சீசனில் பணிபுரிவதற்கு சல்மான் கானுக்கு ஆயிரம் கோடி ரூபாய் சம்பளம் என்றும் தகவல்கள் வலம் வந்தன.
இது தொடர்பாக மௌனம் காத்து வந்த சல்மான் கான், பிக் பாஸ் நிகழ்ச்சியின் 16வது சீசன் அறிமுக விழாவில் இதுகுறித்து விளக்கம் தெரிவித்திருக்கிறார். அதில், “ஆயிரம் கோடி ரூபாய் எல்லாம் நான் சம்பளமாக வாங்கினால் வாழ்க்கையில் அதன் பிறகு சம்பாதிக்கவே வேண்டாம். ஆயிரம் கோடி சம்பளம் என்று வதந்தி பரவியதால் எனக்கு கிடைக்காத அந்த பணத்தை சேனலுக்கே கொடுத்து விடலாம் என்று கருதுகிறேன். அப்படி செய்தால் டிவி சேனல் பயனடையும். அத்துடன் இந்த அளவுக்கு சம்பளம் வாங்கினால் வழக்கறிஞர் கட்டணம் உட்பட பல்வேறு வகை செலவுகள் செய்ய வேண்டியதிருக்கும். இந்த செய்தி வருமானத் துறைக்கு கிடைத்து அவர்கள் நோட்டீஸ் அனுப்பினால் உண்மை வெளியே வரும்” என்று குறிப்பிட்டார்.
மேலும் இந்த 12 ஆண்டுகளாக பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்தி வந்ததில் தான் நிறைய பாடம் கற்றுக் கொண்டதாகவும் சல்மான் கான் இந்த நிகழ்ச்சியில் குறிப்பிட்டுள்ளார்.