நடிகை சாய்பல்லவி தனது குடும்பத்துடன் குல தெய்வம் கோயில் திருவிழாவில் கலந்து கொண்ட புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.
அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய பிரேமம் மலையாள படத்தின் மலர் டீச்சர் கதாபாத்திரம் மூலம் கவனம் ஈர்த்தவர் சாய்பல்லவி. அதற்கு முன்பாக ’உங்களில் யார் அடுத்த பிரபுதேவா’ நடன நிகழ்ச்சியிலும் மற்றும் தாம்தூம் படத்தில் ஒரு சிறிய வேடத்திலும் நடித்திருந்தார்.
ஃபிடா படத்தின் மூலம் டோலிவுட்டில் அறிமுகமான சாய் பல்லவி, தென்னிந்தியாவில் திறமையான நடிகைகளில் ஒருவராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார்.
நாக சைதன்யாவுக்கு ஜோடியாக அவர் நடித்த லவ் ஸ்டோரி, நானி ஜோடியாக ஷ்யாம் சிங்கா ராய் ஆகிய படங்கள் இவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத்தந்தன.
சமீபத்தில் வெளியான விராத பர்வம் மற்றும் கார்கி திரைப்படம் விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. சாய் பல்லவியின் நடிப்பு இந்த திரைப்படங்களில் முக்கிய அம்சமாக அமைந்தது.
சாய்பல்லவி அடுத்ததாக கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ் குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயனுடன் புதிய படத்தில் நடிக்கிறார்.
இந்நிலையில் நடிகை சாய் பல்லவி தனது குல தெய்வ கோயில் திருவிழாவில் பாரம்பரிய உடை அணிந்து குடும்பத்துடன் கலந்து கொண்ட புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.
இந்த புகைப்படங்களில் தங்கை பூஜா கண்ணன், சகோதரர் ஜித்து ஆகியோரும் உள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரியை சுற்றியுள்ள 14 படுகர் கிராம மக்களின் குலதெய்வம் எத்தை அம்மன் ஆகும். மார்கழி மாதம் பௌர்ணமி அன்று எத்தை திருவிழா (Hethai Habba) நடைபெறும்.
அப்போது படுகர் இன மக்கள் ஆயிரக்கணக்கானோர் பாரம்பரிய வெள்ளை உடையில் பெரகனியை அணிந்து தங்கள் குல தெய்வமான எத்தை அம்மனை தரிசனம் செய்ய திரள்வார்கள். ஊர்வலங்கள் செல்வார்கள், பலர் ஹெத்தே தண்டை உயர்த்தி பிடித்து ஊர்வலம் செல்வர், இது எத்தை அம்மனின் அதிசயத்தை அடையாளப்படுத்தும் புனித தண்டு ஆகும்.
சாய் பல்லவி, சில மாதங்களுக்கு முன் தஞ்சை பெரிய கோயிலுக்கும், சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கும் குடும்பத்துடன் சென்று சாமி தரிசனம் செய்தது குறிப்பிடத்தக்கது.