சமீபத்தில் விபத்தில் சிக்கி சுயநினைவு இழந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில் நடிகர் சாய் தரம் தேஜின் உடல்நிலை சீராக இருப்பதாக அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டிருக்கிறது.
தெலுங்கு திரையுலகில் பிரபல சூப்பர் ஸ்டார் நடிகர் சிரஞ்சீவி அவர்களுடைய தங்கை விஜய துர்காவின் மகனும், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவருமான இவர் ஐதராபாத்தில் தன்னுடைய ஸ்போர்ட்ஸ் பைக்கில் சென்று கொண்டிருந்த போது விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
முதலில் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட அவர் பின்னர் ஜூபிலி அப்போலோ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இவர் விபத்துக்குள்ளான சம்பவம் அறிந்த உடனேயே நடிகர்கள் சிரஞ்சீவி, பவன் கல்யாண் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் மருத்துவமனையை அடைந்து, அவருடைய உடல்நிலை தொடர்பாக விசாரித்தனர்.
இந்த நிலையில்தான் தற்போது மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் சாய் தரம் தேஜின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், அவருடைய அனைத்து முக்கியமான உடல் உறுப்புகளும் செயல்படுவதாகவும் அவரது உடல்நிலை தீவிர சிகிச்சை பிரிவில் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக அவருடைய மூளை, முதுகெலும்பு உள்ளிட்ட முக்கிய உறுப்புகளில் பெரிய காயங்கள் இல்லை என்றும் அதேசமயம் தோள்பட்டை முதுகெலும்பில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டிருந்தது.
இந்த நிலையில் தற்போது அவருடைய உடல்நிலை தொடர்பான இந்த புதிய அறிக்கை வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.