சென்னை, 2022, டிச 18:- பிரபல இயக்குனரும் நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் கணவன் - மனைவி பிரிவு குறித்து பேசி ஒரு வீடியோவை பதிவிட்டு இருக்கிறார்.
100% புரிந்து வாழ்கிறார்களா?
அதில் பேசிய இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், “வணக்கம். ஒரு செய்தி கடத்தப்பட்டு இருக்கிறது. மனசுக்கு கஷ்டமாக இருந்தது. ஒரு கணவனும் மனைவியும் முழுவதுமான புரிதலோடு, அதாவது 100% ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு வாழ்ந்திருக்கிறார்களா? வாழ்கிறார்களா? என்று கேட்டால் அதற்கு பல இடங்களில் இருந்து பாசிட்டிவாக பதில் வராது.
குத்தலும் குடைச்சலும் கலந்ததுதான் வாழ்க்கை
குத்தலும் குடைச்சலும் கலந்ததுதான் வாழ்க்கை. அத்துடன் தான் ஒவ்வொருவரும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். கணவன்-மனைவி யாராவது இப்படி பிரிந்து விட்டார்கள் என்ற செய்தி பார்த்தாலே எனக்கு கஷ்டமாக இருக்கும். சம்பந்தம் இல்லாதவர்களாகவே இருப்பார்கள். ஆனாலும் கூட கஷ்டமாக இருக்கும். உடனே நானும் என் மனைவியும் அவர்கள் வீட்டை கண்டுபிடித்து தேடிச் சென்று அவர்கள் ஒன்றாக வாழ்வதற்கு ஆசைப்பட்டு முயற்சி செய்வோம்.
7 வருஷம் பிரிஞ்ச கணவன் மனைவியை சேர்த்து வெச்சோம்
சில நேரங்களில் அது நடக்கும், சில நேரங்களில் அது நடக்காது. ஒருமுறை ஏழு ஆண்டுகள் பிரிந்திருந்த கணவன் மனைவி கூட சேர்ந்திருக்கிறார்கள் எங்கள் வீட்டிலேயே மீண்டும் அவர்களுக்கு மறுமணம் செய்து வைத்தோம். இப்படி சம்பந்தம் இல்லாமல் யாராவது ஒருவர் வாழ்க்கையில் அது நடக்கும் போதே நமக்கு கஷ்டமாக இருக்கிறது. நமக்கு நெருக்கமானவர்கள், நாம் அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என்று மனதில் நினைக்கக் கூடியவர்கள், அவர்களின் வாழ்வில் அப்படி நடக்கும்போது கஷ்டமாக இருக்கிறது.
பிரச்சனை இல்லைனா வாழ்க்கையே இல்ல
எத்தனையோ வருடத்திற்கு முன்பாக கண்ணதாசன், “வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும். வாசல் தோரும் வேதனை இருக்கும்” என்று எழுதியிருக்கிறார். மேலும் அந்த பாடலில், “உனக்கும் கீழே உள்ளவர் கோடி.. நினைத்துப் பார்த்து நிம்மதி தேடு” என்று எழுதி இருக்கிறார். இதை இப்போது சொல்வதுபோல் செல்ல வேண்டும் என்றால், “பிரச்சனை இல்லாத வாழ்க்கை இல்லை. பிரச்சனை இல்லை என்றால் அது வாழ்க்கையே இல்லை!”
இந்த செய்தி கனவாகவே போய் விட கூடாதா?
இந்த பதிவை போடலாமா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டே இருந்தேன். மனசுக்குள் வைத்துக்கொள்ள முடியாமல் இந்த பதிவை போடுகிறேன். எனக்கு ஒரு ஆசை, அந்த செய்தி பொய்த்து போய்விட கூடாதா? என்று தோன்றுகிறது. ஒரு கனவாகவே போய் விட கூடாதா? என்று தோன்றுகிறது. அட்வைஸ் பண்ற அளவுக்கு நான் பெரிய ஆள் இல்லை. வாழ்க்கையை எங்கே தொலைத்தோமோ அதே இடத்தில் தேடினால் தான் வாழ்க்கையோ, நிம்மதியோ, சந்தோஷமோ, பணமோ கிடைக்கும்.
ரசிகனின் குரல்
டி.நகரில் பர்சை போட்டுவிட்டு திருவல்லிக்கேணியில் தேடினால் கிடைக்காது அல்லவா? தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள். இது அட்வைஸ் அல்ல. ஒரு நலம் விரும்பியின் குரல். இன்னும் லோக்கலாக சொல்ல வேண்டுமென்றால் ரசிகனின் குரல்!” என்று உருக்கமாக பேசியிருக்கிறார்.
Also Read: நானும் தம்பி பிரபுதேவாவும் எப்படி வேணா போய்ருக்கலாம்.. ஆனா.. Bigg Boss-ல் உடைத்த கமல்!