ஹோம்பாலே பிலிம்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கும் திரைப்படம் 'கே ஜி எஃப் சாப்டர் 2’. இந்த படம் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதியன்று வெளியாகிறது.

இப்படத்தை, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார். இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் தயாராகியிருக்கும் 'கே ஜி எஃப் சாப்டர் 2' படத்தில் கதையின் நாயகனாக ‘ராக்கிங் ஸ்டார்’ யஷ் நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடித்திருக்கிறார். இவர்களுடன் பாலிவுட் நடிகர் சஞ்சய்தத், ரவீணா டாண்டன், பிரகாஷ் ராஜ், மாளவிகா அவினாஷ், அச்சுத் குமார், ராவ் ரமேஷ், ஈஸ்வரி ராவ், ராமச்சந்திர ராஜு, ஜான் கொக்கேன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். புவன் கௌடா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ரவி பஸுரூர் இசையமைத்திருக்கிறார்.
‘கே ஜி எஃப் 2’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இவ்விழாவில் படத்தை வெளியிடும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனர் தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு, சண்டைப்பயிற்சி இயக்குநர் அறிவு, தமிழ் பதிப்பிற்கு வசனம் எழுதிய வசனகர்த்தா அசோக், ஒளிப்பதிவாளர் புவன் கௌடா, தயாரிப்பு வடிவமைப்பாளர் கார்த்திக் கௌடா, நடிகை ஈஸ்வரி ராவ், நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி, நடிகர் சரண் இயக்குநர் பிரசாந்த் நீல் மற்றும் படத்தின் கதாநாயகனான ‘ராக்கிங் ஸ்டார்’ யஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
படத்தை வெளியிடும் தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு பேசுகையில், '' கே ஜி எஃப் படத்தின் முதல் பாகத்திலேயே இணைந்து பணியாற்ற வேண்டிய வாய்ப்பு கிடைத்தது. ஆனால் பல்வேறு சூழல் காரணமாக இணைந்து பணியாற்ற முடியவில்லை. கே ஜி எஃப் படத்தின் ஒவ்வொரு துறையிலும் பணியாற்றிய கலைஞர்கள் தெளிவான திட்டமிடலுடன் நேர்த்தியாக பணியாற்றியதால் இவ்வளவு பெரிய பிரம்மாண்டமான படைப்பாக இது உருவாகி இருக்கிறது.
எங்களுடைய நிறுவனத்திலிருந்து தயாராகும் திரைப்படங்களை மட்டுமே விநியோகித்துக் கொண்டிருந்தோம். அதன் பிறகு ஏனைய தயாரிப்பாளர்கள், தயாரிப்பு நிறுவனங்களின் திரைப்படங்களையும் வினியோகிக்கலாம் என்ற முடிவுக்கு வந்தோம்.
திரைப்பட துறையில் பிரம்மாண்டத்திற்கு என எப்போது ஒரு தனி ஈர்ப்பு உண்டு. டைரக்டர் ஷங்கர் சார் தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் பிரம்மாண்டம் என்ற விஷயத்தை அறிமுகப்படுத்தினார். அதனால் திரைத்துறை ஆரோக்கியமாக வளர்ச்சி அடைந்தது. வணிக எல்லையும் விரிவடைந்தது. புதுபுது தொழில்நுட்பங்களும், புதிய சிந்தனைகளும் உருவானது. மற்றொருபுறம் ராஜமௌலி சார் பிரம்மாண்டத்தை தன் பாணியில் வழங்கி ஆச்சரியப்படுத்தினார். அதை தொடர்ந்து பிரசாந்த் நீல் சார் அனைவரையும் திக்குமுக்காடும் வகையில் புதிய வகையிலான பிரமாண்டமான கே ஜி எஃப்பை வழங்கினார். எப்படி அவரால் இப்படியும் ஒரு விசயத்தை சிந்திக்க முடிந்தது என்று வியந்து பார்க்கிறேன். ஒவ்வொரு மாநில திரைத்துறையும் ஒன்றிணைந்து இன்று இந்திய திரைப்படத் துறை என்ற புது வடிவம் பெற்றிருக்கிறது. இது மகிழ்ச்சியை அளிக்கிறது. ஒரு மொழியில் உருவான படத்தை இந்தியா முழுவதும் பார்வையாளர்களால் ரசிக்கப்படுவது சந்தோஷமாக இருக்கிறது. இதன்மூலம் சர்வதேச தரத்திலான படைப்புகளை உருவாக்கும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இது சாதாரணமான விசயமல்ல. இதற்கான முயற்சியை தயாரிப்பாளர், இயக்குநர், நட்சத்திர நடிகர் என மூவரும் ஒன்றிணைந்து, பொறுமையுடன் காத்திருந்து ,தெளிவான திட்டமிடலுடன் உழைத்து பூர்த்தி செய்திருக்கிறார்கள். இந்த வகையில் உருவான கே ஜி எஃப் 2 ஏப்ரல் 14ஆம் தேதியன்று வெளியாகிறது.
இந்தப் படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடுவதற்காக எங்களின் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் உண்மையில் மகிழ்ச்சி அடைகிறது. தமிழ் ரசிகர்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு ஒரே நேரத்தில் இரண்டு பெரிய நட்சத்திர நடிகர்களின் படங்கள் வெளியாகி இருப்பதால் கொண்டாட்டமான காலகட்டம். இரண்டு படங்களையும் பார்த்து கொண்டாடுங்கள். இயக்குநர் பிரசாந்த் நீல் அவர்கள் கன்னடத்தை தொடர்ந்து தெலுங்கிலும் தற்போது படத்தை இயக்கிவருகிறீர்கள். விரைவில் தமிழிலும் திரைப்படத்தை இயக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். ராக்கிங் ஸ்டார் யஷ் அவர்களுக்கு தமிழகத்திலும் ரசிகர்கள் உருவாகி இருப்பதால், நீங்களும் தமிழில் நடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். '' என்றார்.