விஜய்யின் 'பீஸ்ட்' படம் திரையிடப்பட்ட தியேட்டரில் திடீரென அரங்கேறிய சம்பவம் ஒன்று, தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.
நடிகர் விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம், பொங்கல் ஸ்பெஷலாக மாஸ்டர் திரைப்படம் வெளியாகி இருந்தது.
இதற்கு அடுத்தபடியாக, நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வந்தார் விஜய். இந்த படத்தின் பாடல்கள், டிரைலர் மற்றும் போஸ்டர்கள் என அனைத்தும் வெளியாகி, படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்திருந்தது.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே முதல் முறையாக இணைந்திருந்தார். அந்த வகையில், தமிழ் புத்தாண்டாக பீஸ்ட் திரைப்படமும், 13.04.2022 அன்று வெளியாகி, மக்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெற்று வருகிறது.
குழம்பி போன பீஸ்ட் ரசிகர்கள்
தமிழகத்தில் உள்ள பல திரையரங்குகளில், ரசிகர்களின் சிறந்த ஆதரவுடன் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது பீஸ்ட் திரைப்படம். இந்நிலையில், மதுரையில் அமைந்துள்ள தியேட்டர் ஒன்றில் பீஸ்ட் படத்தின் போது நடந்த சம்பவம் தொடர்பான வீடியோக்கள் தற்போது நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
மதுரை பகுதியிலுள்ள திரையரங்கு ஒன்றில், பீஸ்ட் படம் திரையிடப்பட்டுள்ளது. படத்தினை பார்க்க வந்திருந்த ரசிகர்கள், அமோக ஆரவாரத்துடன் படத்தினை கண்டு களித்தும் வந்தனர். தொடர்ந்து, இடைவேளையும் வர, அந்த நேரத்தில் வெளியே சென்று விட்டு மீண்டும் பீஸ்ட் பார்க்க வந்திருந்த ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது.
என்னங்க RRR படம் ஓடுது?
பீஸ்ட் படத்தின் இரண்டாம் பாதிக்கு பதிலாக, திடீரென RRR படத்தின் காட்சிகள் திரையில் ஆரம்பித்து ஓடியுள்ளது. இதனைக் கண்ட ரசிகர்கள், RRR படம் ஓடுகிறது உடனே மாற்றி, பீஸ்ட் இரண்டாம் பாதியை போடுங்கள் எனக்கூறி கூச்சலிட்டுள்ளனர். விஜய் வந்து கொண்டிருந்த திரையில், திடீரென ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம்சரணைக் கண்டதும் ரசிகர்கள் ஒரு நிமிடம் குழம்பி போயினர்.
மேலும், தொடர்ந்து கொஞ்ச நிமிடங்களுக்கு RRR திரைப்படமே ஓடியதாக கூறப்படும் நிலையில், அதன் பின்னரே மீண்டும் பீஸ்ட் படம் போடப்பட்டதாகவும் தகவல்கள் குறிப்பிடுகிறது. இது தொடர்பான வீடியோக்கள், தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.
ராஜமவுலி இயக்கத்தில், ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் நடித்திருந்த 'RRR' திரைப்படம், கடந்த மார்ச் 22 ஆம் தேதி வெளியாகி, தற்போதும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.