IMDB-யின் இந்தியத் திரைப்பட தரவரிசைப் பட்டியலில் சமீபத்தில் ஆர்.மாதவன் இயக்கி, நடித்து வெளியான ராக்கெட்ரி: தி நம்பி விளைவு திரைப்படம் முதலிடத்தை பிடித்துள்ளது.
சென்னை; 08, ஆகஸ்டு, 2022:- இஸ்ரோ விஞ்ஞானியான நம்பி நாராயணன் வாழ்க்கை வரலாற்றை தழுவி உருவான திரைப்படம் 'ராக்கெட்ரி: நம்பி விளைவு'.
'ராக்கெட்ரி: நம்பி விளைவு'.
கதைப்படி, ராக்கெட் அறிவியல் மேதைமையுடன் திகழும் நம்பி நாராயணன், தமது அதீத அறிவாற்றலுக்கான நாசாவில் வேலை கிடைத்தும், நாட்டுப்பற்றுடன் இஸ்ரோவுக்காக பணிபுரிந்து வந்தார். இந்திய ஏவுகணை இயக்கத்துக்கு தேவையான தற்சார்பு என்ஜினை உருவாக்குவதற்காக உலகம் முழுவதும் பயணித்த நம்பியின் வரலாற்றை படம் ஆவணப்படுத்துகிறது.
அதுமட்டுமல்லாமல், நம்பி நாராயணன் மீது எதிர்பாராத விதமாக ஒரு அபத்தமான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, தவறான வழக்கில் அவர் விசாரணை கைதியாகிறார். பின்னர் விடுவிக்கப்பட்டவர், அந்த வழக்கில் இருந்து எவ்வாறு விடுதலை பெறுகிறார் என்பது ஒருபுறமும், இன்னொரு புறம் அவர் தனிப்பட்ட வாழ்க்கையில் சந்தித்த சோதனைகளும் செய்த சாதனைகளும் இப்படத்தில் காட்டப்பட்டுள்ளன.
மாதவன் இயக்கி நடித்த படம்..
இப்படத்தினை எழுதி இயக்கி நம்பி நாராயணனாக, நடிகர் ஆர்.மாதவன் நடித்திருக்கிறார். மாதவனின் மனைவியாக சிம்ரன் நடிக்க, படத்தில் விக்ரம் சாராபாய், அப்துல் கலாம், நீல் ஆம்ஸ்ட்ராங் ஆகிய நிஜ வாழ்க்கை பிரபலங்களும் கதாபாத்திரங்களாக இடம் பெறுகின்றனர்.
இந்த திரைப்படத்தில் நம்பி நாராயணனை பேட்டி எடுக்கும் ஸ்பெஷல் கேமியோ கதாபாத்திரத்தின் இந்தி பதிப்பில் ஷாருக் கானும், தமிழ் பதிப்பில் நடிகர் சூர்யாவும் நடிகர்களாகவே வந்து அவரவர் கேரக்டரிலேயே பங்கேற்று நடித்துள்ளனர்.
IMDB Top Rating-ல் முதலிடம்..
இந்த நிலையில் தான், உலக திரைப்படங்களைப் பற்றிய அனைத்துத் தகவல்களையும் வழங்கும் தளமாக விளங்கும் IMDB-யின் சிறந்த திரைப்படங்களை குறித்த தரவரிசைப் பட்டியலில் ராக்கெட்ரி: தி நம்பி விளைவு திரைப்படம் முதலிடத்தை பிடித்துள்ளது.
IMDB தரவரிசைப் பட்டியல் என்பது அநேகமான சினிமா ரசிகர்கள் மற்றும் திரை ஆர்வலர்களின் நம்பிக்கையை பெற்ற பட்டியலாகவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.