ஹாரி பாட்டர் படங்களில் ஹாக்ரிடாக நடித்த நடிகர் ராபி கோல்ட்ரேன் தனது 72வது வயதில் காலமானார்.
ஸ்காட்லாந்து நாட்டில் உள்ள ஃபால்கிர்க் அருகேயுள்ள மருத்துவமனையில் ராபி கோல்ட்ரேன் இறந்துவிட்டதாக அவரது மேனேஜர் பெலிண்டா ரைட் உறுதிப்படுத்தியுள்ளார்.
ஸ்காட்லாந்து நாட்டில் பிறந்த ராபி கோல்ட்ரேனின் இயற்பெயர் அந்தோனி ராபர்ட் மெக்மில்லன் ஆகும். இவர் 1950 ஆம் ஆண்டு தெற்கு லானார்க்ஷயரில் உள்ள ரூதர்க்லனில் பிறந்தார்.
இவர் கிராக்கர் (டிவி தொடர்) மற்றும் ஜேம்ஸ் பாண்ட் படங்களான கோல்டனி மற்றும் தி வேர்ல்ட் இஸ் நாட் எனஃப் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.
ஹாரி பாட்டர் எழுத்தாளர் ஜேகே ரவுலிங் தனது ட்விட்டரில் ராபி கோல்ட்ரேனுக்கு இரங்கல் செலுத்தியுள்ளார். "இனிமேல் ராபியைப் போன்ற யாரையும் நான் இனி ஒருபோதும் அறிந்து கொள்ளப் போவதில்லை. அவர் ஒரு வியக்கத்தக்க திறமையாளர். அவரை அறிந்துகொள்ளவும், அவருடன் பணிபுரியவும், அவருடன் சேர்ந்து சிரிக்கவும் வாய்ப்பு கிடைத்த நான் ஒரு அதிர்ஷ்டசாலி. எல்லாவற்றிற்கும் மேலாக அவரது குடும்பத்தினருக்கு எனது அன்பையும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்." என ரவுலிங் குறிப்பிட்டுள்ளார்.
டேனியல் ராட்க்ளிஃப், ரூபர்ட் கிரின்ட் மற்றும் எம்மா வாட்சன் ஆகியோருடன் 90ஸ் கிடஸ்களுக்கு பிடித்த படமான ஹாரி பாட்டர் திரைப்படத்தொடரின் எட்டு படங்களிலும் ரூபியஸ் ஹாக்ரிட் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் உலகம் முழுவதும் ராபி புகழ் பெற்றார்.