அங்காடி தெருவில் ஒரு ரவுண்ட் அடிப்போமா..? தமிழ் சினிமாவின் மாஸ்டர் பீஸ் ஏற்படுத்திய மேஜிக்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இன்று கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் அனைவரும் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கிறோம். தியேட்டர்கள், மால், வனிக வளாகங்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன. எப்போதுமே பரபரப்பாக காணப்படும் சென்னை ரங்கநாதன் தெருவில், ஆட்களேயின்றி கிரிக்கெட் விளையாடிய கூத்துக்கள் கூட அரங்கேறின. அப்படியான ரங்கநாதன் தெருவையும் அதை சுற்றியுள்ள வாழ்க்கையையும் மிக அழகாக சொல்லிய அங்காடி தெரு வெளியாகி இன்றோடு பத்து ஆண்டுகள் ஆகிறது. இந்த நேரத்தில் வசந்தபாலனின் அங்காடி தெரு என்கிற மாஸ்டர் பீஸ் ஏற்படுத்திய மேஜிக் குறித்து ஒரு பார்வை.

2010-ஆம் ஆண்டு மார்ச் மாதம். மாணவர்களின் பரீட்சை காலம் என்பதால் எப்போதுமே மார்ச் மாதத்தில் படங்களை ரிலீஸ் செய்ய தயங்குவார்கள். போதா குறைக்கு அப்போது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் வேறு உச்சத்தில் இருந்தது. அப்போதுதான் அங்காடி தெரு ரிலீஸ். சிறுவயதில் இருந்தே பார்த்து வந்த தி-நகரையும், அதன் மக்களையும் முதல் முறையாக சினிமாவில் காட்டுகிறார்கள் என்ற ஆர்வத்துடனே படம் பார்க்க பலர் தியேட்டருக்கு விசிட் அடித்தனர். ஆனால் பார்த்தவர்கள் திரும்பி வந்த போது அவர்கள் எடுத்துக்கொண்ட வந்தது அவர்களின் வாழ்க்கையை மட்டுமல்ல, கொண்டாட்டம், சோகம், வலி என பல உணர்வுகளை. நம்மில் பல பேர் தி-நகர் தெருக்களில் கண்டிப்பாக உலாவி இருப்போம். சென்னையில் இருப்பவர்கள் முதல் தமிழகத்தின் கிராமங்களில் கூட தி-நகரும் அங்கு இருக்கும் துணிக்கடைகளும் பிரபலம். ஆனால் அங்கு வேலை செய்பவர்களை பற்றி தமிழ் சினிமாவில் எடுக்கப்பட்ட ஒரு உன்னதமான படைப்புதான் அங்காடி தெரு.

அங்காடி தெருவின் வெற்றியே அதன் உணர்வுகள்தான். ஜோதிலிங்கத்துக்கும்-கனிக்கும் இடையே அழகான காதல் இருக்கும். அதே போல ஹீரோவுக்கும் அவன் நண்பனுக்கும் இடையே ஆழமான நட்பு இருக்கும். இப்படி அவர்களின் காதல், ஏமாற்றம், வலி என ஒவ்வொன்றையும் தனது காட்சிகளால் செதுக்கியிருப்பார் வசந்தபாலன். பின்தங்கிய கிராமத்தில் இருப்பவர்களை எப்படி வேலைக்கு அழைத்து வருகிறார்கள், இங்கு அவர்கள் எப்படி தங்கி வாழ்கிறார்கள், என்னென்ன பிரச்சனைகளை சந்திக்கிறார்கள் என உண்மையை முகத்தில் அறையும் வன்னம் காட்சிப்படுத்தியிருப்பார் வசந்தபாலன். குறிப்பாக பெண்கள் வேலை சமூகத்தில் என்ன மாதிரியான பிரச்சனைக்கு ஆளாகிறார்கள் என்பதை ஆழமாகவும் நுட்பமாகவும் பதிவு செய்தமைக்காகவே வசந்தபாலனை வரவேற்கலாம். அதே போல கதாபாத்திர வடிவமைப்பை பாராட்டியே ஆக வேண்டும். ஹீரோவின் நண்பன், ஹீரோயினின் தோழி, கண் தெரியாத தாத்தா, காதலித்து இறந்து போகும் பெண், அவளை நினைத்து பித்து பிடித்து திரியும் காதலன், கழிவறையை சுத்தம் செய்து வாழும் ஆள், துணிக்கடை  அண்ணாச்சி, கடை சூப்பர்வைசர் என தி-நகரில் நாம் அடிக்கடி பார்த்த மனிதர்களின் பார்க்காத கதையை வசந்தபாலன் நேர்த்தியாக சொல்லியிருப்பார். அதுதான் படத்தை மிகப்பெரிய வெற்றியாக்கியது என்றே சொல்லலாம்.

''ஆமாண்டி, ஒரு நிமிஷம் தயங்குனேன், பெரிய போத்தீஸ் ஓனர் பேத்தி நீ'' என குடும்ப சுமையை சுமக்கும் இளைஞனின் நிலையை அழகான வசனங்களால் வடிவமைத்திருப்பார் வசந்தபாலன். அதே போல அப்போது அங்காடி தெருவை அனைவரிடமும் கொண்டு சேர்த்ததில் படத்தின் இசைக்கு மிகப்பெரிய பங்குண்டு. அவள் அப்படி ஒன்றும் அழகில்லை, கதைகளை பேசும் விழியருகே, உன் பேரை சொல்லும் போதே உள்ளிட்ட பாடல்கள் அன்று தமிழகத்தின் சார்ட் பஸ்டர் மெலடீஸாக கலக்கியது. காதலர்கள் இருவரும் கடையை விட்டு வந்து, சந்தோஷமாக திரிந்து ஒருவரின் கால்களை இன்னொருவர் தட்டி விளையாடி கொண்டிருப்பார்கள். அடுத்த சில மணி நேரங்களில் விபத்துக்குள்ளாகி, அவள் கால்கள் இல்லாமல் போகிறாள். இரண்டும் வெவ்வேறு காட்சிகள்தான், ஆனால் அவற்றுக்குள் வசந்தபாலன் உணர்வுகளை கொண்டு உண்டாக்கிய முரன்தான் நமக்குள் மேலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இது போன்ற காட்சிகளின் மூலம் அவர் எப்போதுமே தன்னை ஒரு மாஸ்டர் டைரக்டர் என நிரூபித்து கொண்டிருக்கிறார்.

இங்கு மட்டுமில்லை, அங்காடி தெரு காண்பித்த கதை இந்த உலகம் முழுவதும் இருக்கிறது. பண்ணைகளில், ஃபேக்டரிகளில், நிறுவனங்களில் அடித்தட்டு மக்கள் இன்னும் சம்பளத்துக்காக அடிமைகள் போல நடத்தப்பட்டு கொண்டுதான் இருக்கிறார்கள். அப்படியான சூழலில், அங்காடி தெரு நமக்கு மட்டுமல்ல, உலகம் முழுவதிலும் கொண்டாடப்பட வேண்டிய ஓர் உலக சினிமா. இந்த பத்து வருடங்கள் அல்ல, காலங்கள் கடந்தும் அங்காடி தெரு கொண்டாடப்பட்டு கொண்டேதான் இருக்க போகிறது. காரணம் தனது எழுத்துக்களாலும் காட்சிகளாலும் வசந்தபாலன் செய்த மேஜிக் அது. இப்படியான ஒரு க்ளாசிக்கை தமிழ் சினிமாவுக்கு கொடுத்ததற்கு அங்காடி தெரு படக்குழுவை எப்போதுமே பாராட்டலாம்... அடுத்த படைப்பிற்காக காத்திருக்கிறோம் வசந்தபாலன் சார்... சீக்கிரம்.!

அங்காடி தெரு படம் ஒரு பார்வை | remembering anjali vasanthabalan's angadi theru on its 10th anniversary

People looking for online information on Angadi theru, Anjali, Mahesh, Vasanthabalan will find this news story useful.