சென்னையில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தின் 15 ஆண்டுகால திரைப்பயணம் தொடர்பாக சிறப்பு விழா நடக்க இருப்பதாக நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரெட் ஜெயன்ட் மூவிஸ் எனும் நிறுவனம் பல படங்கடளை தயாரித்தும், வினியோகம் செய்தும் வந்த ஒரு முக்கியமான திரைப்பட தயாரிப்பு நிறுவனம். குருவி, ஆதவன், ஏழாம் அறிவு, நீர்ப்பறவை போன்ற படங்களும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட படங்களாகும்.
குறிப்பாக அண்மைக்கால படங்களான ஆர்.ஆர்.ஆர், டான், விக்ரம், ராக்கெட்ரி, FIR, காத்துவாக்குல ரெண்டு காதல், அடுத்து ரிலீஸ் ஆகவுள்ள சந்தானத்தின் குலு குலு போன்ற படங்கள் ரெட் ஜெயன்ட் நிறுவனம் மூலம் விநியோகம் செய்யப்பட்டவை.
இப்படி பல தொடர் திரைப்பயணங்களை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கடந்துவிட்டது. இந்நிலையில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தின் 15 ஆண்டுகால திரைப்பயணத்தை ஒட்டி, சென்னையில் வரும் திங்கட்கிழமை மிகப் பெரிய நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிகழ்வில் சமீபத்தில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் சார்பில் விநியோகம் செய்யப்பட்ட 7 தமிழ் படங்களின் நடிகர்களும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் திரைப்பட தயாரிப்பு மற்றும் விநியோக பணிகளை மேற்கொள்கிறார்.
உதயநிதி ஸ்டாலின் தற்போது சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞரணி செயலாளராகவும் உள்ளார்.
நடிகராக உதயநிதி ஸ்டாலின் கடைசியாக அருண்ராஜா காமராஜ் இயக்கத்திலான நெஞ்சுக்கு நீதி படத்தில் நடித்தார். அடுத்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் படத்தில் நடித்து வருகிறார்.