தமிழ் இலக்கிய உலகில் புகழ் பெற்ற கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலை இயக்குனர் மணிரத்னம் இரண்டு பாகங்களாக இயக்கிக் கொண்டிருக்கிறார்.

தமிழ் சினிமாவில் மிகுந்த பொருட்செலவில் இப்படம் உருவாகிறது. லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. முக்கிய வேடங்களில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லெட்சுமி, லால், ஜெயராம், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படத்தின் இரண்டு போஸ்டர்கள் இதுவரை வெளிவந்துள்ளன.
இந்த படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரி கடற்கரை பகுதியில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கொரோனோ பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றுவதோடு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக படக்குழுவினருக்கு மட்டுமே படப்பிடிப்பு பகுதியில் அனுமதி அளிக்கப்பட்டு, ‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பு மிகுந்த பாதுகாப்புடன் நடைபெறுகிறது.
இன்று முதல் பாண்டிச்சேரியில் நடைபெறும் இந்த படப்பிடிப்பில் நடிகை ஐஸ்வர்யாராய் கலந்து கொள்கிறார். ஐஸ்வர்யா ராய் ஏற்கனவே மணிரத்னத்துடன் இருவர், குரு, ராவணன் போன்ற படங்களில் பணியாற்றியுள்ளார் என்பதும், இருவர் படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பின்னர் படக்குழு ஹைதராபாத் ராமோஜி ராவ் பிலிம் சிட்டி செல்கின்றனர். அங்கு இறுதிக்கட்ட படப்பிடிப்புடன் பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்களுக்கான முழு படப்பிடிப்பும் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.