விஜய் டிவியின் பிரபல தொடரான பாரதி கண்ணம்மா மாதிரியே நிஜத்தில் ஒரு பெண்ணுக்கு நடந்துள்ள வாழ்க்கை சம்பவம் குறித்து நடிகை கஸ்தூரி தமது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
பாரதி கண்ணம்மா சீரியலில், கண்ணம்மாவுக்கு பிறந்த குழந்தை தன்னுடையது அல்ல என்று நினைத்துக் கொண்டிருக்கும் டாக்டர் பாரதி, தன் மனைவி கண்ணம்மாவை நம்பாததால், இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். இவர்களின் ஒரு குழந்தை கண்ணம்மாவிடமும், இன்னொரு குழந்தை பாரதியிடமும் வளர்கின்றனர். இந்த குழந்தைகள் மூலமாவது இவர்கள் இருவரும் ஒன்று சேர்வார்களா என்பதை நோக்கி சிரீயல் போகிறது.
இந்நிலையில் இதேபோல் ஒரு நிஜ வாழ்க்கை கண்ணம்மா பற்றி வெளியுலகத்துக்கு தெரியவந்துள்ளது. ஆம், சென்னை கொளத்தூரில், முருகன் நகரைச் சேர்ந்த இளவரசி தான் அந்த நிஜ கண்ணம்மா. 65 வயதான இவர், 1975ல், அதாவது தன் 19வது வயதில் விஜய கோபாலன் என்பவரை காதல் திருமணம் செய்து, 7 மாதங்கள் மட்டுமே சேர்ந்து வாழ்ந்துள்ளார்.
ஒரு கட்டத்தில் இளவரசி கருவுற்றதும், விஜய கோபாலன் திட்டமிட்டு இளவரசியை கழட்டிவிட்டு, வேலைக்காக ஹைதராபாத் போவதாக சொல்லிவிட்டு சென்றவர் திரும்பி வரவேயில்லை. கடிதங்கள் மட்டுமே கம்யூனிகேஷனுக்காக இருந்த காலம் அது. செல்போன்கள் இல்லை. வயிற்றில் குழந்தையை சுமந்து கொண்டு விஜய கோபாலனை தேடி அலைந்தார் இளவரசி. அதற்குள் ஒரு குழந்தை பிறந்துவிட, காணாமல் போன கணவர் கிடைக்காமல் 10 ஆண்டுகளாக இளவரசி தவித்துள்ளார்.
10 ஆண்டுகளுக்கு பிறகு, அதாவது 1985 தான், விஜய கோபாலன் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டு, காவல்துறையில் பணி செய்து வருவதும் தெரியவந்தது. பின்னர் இதுகுறித்து சென்னை செம்பியம் காவல் நிலையத்தில் போலீசில் இளவரசி புகார் அளிக்க, விசாரணையின்போது இளவரசியை தெரியாது என்றும், அவருக்கு பிறந்த குழந்தையை பற்றியும் தனக்கு எதுவும் தெரியாது என்றும் விஜய கோபாலன் மறுத்துள்ளார்.
காலம் ஓடியது. 35 ஆண்டுகள் இப்படியே கழிய, 2010ஆம் ஆண்டு, இளவரசியின் மகள் தொடுத்த வழக்கில், நீதிமன்றத்தின் உத்தரவுப்படி டிஎன்ஏ பரிசோதனை நடத்தப்பட்டு, முடிவில் இளவரசியின் மகளுக்கு விஜய் கோபாலன் தான் தந்தை என உறுதிசெய்யப்பட்டது. திருமணம் முடிந்து 46 ஆண்டுகள் ஆகி, புகார் செய்து 36 ஆண்டுகள் ஆகி, நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து 11 ஆண்டுகள் ஆகியுள்ளது.
காவல்துறையில் பணியாற்றி வந்த விஜய கோபாலனோ, சென்னை அயனாவரம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி ஓய்வும் பெற்றுவிட்டார். இப்போது விஜய கோபாலனுக்கு 72 வயது ஆகிறது. இளவரசிக்கு வயது 65. இந்நிலையில் தான் விஜய் கோபாலன் மீது இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் பெண்ணை ஏமாற்றியது, இன்னொரு திருமணம் செய்தது என வழக்குகள் பதிவாகியுள்ளன.
இந்நிலையில் இந்த உண்மையைச் செய்தியை பகிர்ந்து, ட்வீட் பதிவிட்டுள்ள கஸ்தூரி, “தாமதமான நீதி. ஒரு சோகமான கதை. 'இளவரசி' என்ற பெண்மணி தனது வாழ்நாள் முழுவதும் போராடியிருக்கிறார். கர்ப்பிணி மற்றும் கணவனால்கைவிடப்பட்டவர். காவல்துறையினரிடம் செல்வது உதவவில்லை, ஏனெனில் கணவரும் ஒரு போலீஸ்காரர். 45 வருட உண்மைக்குப் பிறகு வெற்றி பெற்றது, ஆனால் அவரது வாழ்க்கை வீணானது.” என உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.