சென்னையை மட்டுமில்லாமல் தமிழகத்தையே அதிரவைத்துள்ளது சென்னை பிஎஸ்பிபி பள்ளி ஆசிரியர் மீது எழுந்துள்ள பாலியல் குற்றச்சாட்டுகள்.
தொடர்ந்து 5 வருடங்களுக்கும் மேலாக மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்து வந்ததாக தற்போது சென்னை பிஎஸ்பிபி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இதனிடையே அந்த பள்ளியின் நிர்வாகம் சம்மந்தப்பட்டோர் போலீஸாரால் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் திரைத்துறையினர் பலரும் இந்த விவகாரம் குறித்த தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருவதுடன், சம்மந்தப்பட்ட ஆசிரியர் மற்றும் இதுபோன்ற குற்ற காரியங்களில் ஈடுபடும் ஏனையோர் மீதுமான தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
இதனிடையே இந்த ஆசிரியரின் செயலை பலரும் பிரபல திரைப்படமான ராட்சசன் படத்தில் வரும் ஆசிரியர் இன்பராஜ் எனும் கதாபாத்திரத்துடன் ஒப்பிட்டு பேசி வருகின்றனர். இந்நிலையில் இதுபற்றி பேசிய எழுத்தாளர் நர்சிம், “இன்னிக்கு முழுக்க ஏதேதோ வேலைல இருந்தாலும் இந்த PSBB school விவகாரம், அந்த ராஜகோபலனின் கீழ்மையும்தான் ஓடிட்டே இருந்துச்சு. ராட்சசன் படம் வந்தப்ப, மாணவிகளின் பெற்றோர் எவ்வளவு பயப்படுவாங்க இதெல்லாம் தவறான படம்னு வாதம் செய்தேன். மிகக்கடுமையான தண்டனை என்பது முதல் தேவை!” என தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இந்த ட்வீட்டை ரி-ட்வீட் செய்துள்ள ராட்சசன் பட இயக்குநர் ராம் குமார், “ராட்சசன் இன்பராஜ் கதாபாத்திரம் சுயமாக உருவாக்கம் செய்யபடவில்லை. பல உண்மை சம்பவங்களின் அடிப்படையில்தான் உருவாக்கப்பட்டது. அந்த சம்பவங்களின் குற்றவாளிகள் இன்பராஜை விட மோசமானவர்களாக இருந்தார்கள்!” என குறிப்பிட்டுள்ளர். ராட்சசன் படத்தில் வரும் ஆசிரியர் இன்பராஜ் கதாபாத்திரத்தை நடிகர் வினோத் சாகர் ஏற்று நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.