தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையான ராஷ்மிகா, தமிழில் கார்த்தி நடித்த சுல்தான் படம் மூலம் அறிமுகமானார்.
கன்னட திரைப்பட நடிகையாக திரைத்துறைக்குள் அறிமுகமான ராஷ்மிகா, பின்னர் தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து 'கீதா கோவிந்தம்' உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார். இதனை அடுத்து, யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவான 'டாப் டக்கர்' ஆல்பம் பாடலில் நடித்து இந்திய அளவில் ட்ரெண்ட் ஆனார்.
இவருக்கு தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலும் ரசிகர்கள் உள்ள நிலையில், தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவரும் ராஷ்மிகாவின் தீவிர ரசிகருமான ஆகாஷ் திரிபாதி என்பவர், ராஷ்மிகாவை சந்தித்தே ஆக வேண்டும் என்கிற வேட்கையில் ராஷ்மிகாவின் வீடு இருக்கும், கர்நாடக மாநிலம், குடகு மாவட்டத்தை நோக்கி, லாக்டவுன் என்றும் பாராமல், சுமார் 900 கி.மீ பயணம் செய்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
எனினும் அவரை மடக்கிய போலீஸார், நடிகை ராஷ்மிகா ஷூட்டிங்கிற்காக மும்பை சென்றுவிட்டதாகவும், கர்நாடகாவில் லாக்டவுன் அமலில் இருப்பதாகவும் தெரிவித்து திருப்பி அனுப்பினர். பின்னர் மும்பையில் படப்பிடிப்பில் இருந்த நடிகை ராஷ்மிகா வீடு திரும்பியதும், இதுகுறித்த அவருக்கு தெரியவந்தது.
இதையடுத்து அவர் தமது ட்விட்டரில், “என்னை காண, வெகு தூரம் பயணித்து எனது வீட்டிற்கு போயிருக்கிறீர்கள். உங்களை சந்திக்க முடியாமல் போனதற்கு வருந்துகிறேன். தயவுசெய்து இனி இப்படி செய்யாதீர்கள். எனினும் நான் உங்களை நேரில் சந்திப்பேன் என நம்புகிறேன். அதுவரையில் நீங்கள் இருக்குமிடம் இருந்தே அன்பு செலுத்தினால் மகிழ்ச்சி அடைவேன்!” என்று ராஷ்மிகா தெரிவித்துள்ளார்.