தளபதி விஜய் நடிப்பில் அடுத்ததாக 'வாரிசு' திரைப்படம் வெளியாக உள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 11.01.2023 அன்று திரை அரங்குகளில் வெளியாகிறது. வாரிசு திரைப்படத்தை இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கி உள்ளார்.
வாரிசு படத்தில் நடிகர் விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா முதல் முறையாக இணைந்து நடித்துள்ளார். இவர்களுடன் பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, குஷ்பு, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா எனப் பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு, ஹரி மற்றும் ஆஷிஷோர் சாலமன், விவேக் இணைந்து கதை & கூடுதல் திரைக்கதை எழுதி உள்ளனர். இசை மற்றும் ஒளிப்பதிவு முறையே எஸ் தமன் மற்றும் கார்த்திக் பழனி கவனித்து வருகின்றனர். கேஎல் பிரவீன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.
மேலும் இந்த படத்தை தயாரிப்பாளர்கள் தில் ராஜு & ஷிரிஷின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸின் கீழ் தயாரிக்கிறார்கள். வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா, கடந்த டிசம்பர் 24 ஆம் தேதியன்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் வைத்து நடைபெற்றிருந்தது.
இந்த நிகழ்வில், விஜய், ராஷ்மிகா மந்தனா , எஸ்.ஏ.சந்திரசேகர், ஷோபா சந்திரசேகர், வாரிசு பட தயாரிப்பாளர் தில் ராஜூ, இயக்குனர் வம்சி பைடிபள்ளி, இசையமைப்பாளர் தமன், சங்கர் மகாதேவன், டிரம்ஸ் சிவமணி, பிரகாஷ் ராஜ், சரத்குமார், நடிகர் ஷாம் மற்றும் பலர் கலந்துகொண்டனர். வாரிசு படத்தின் 5 பாடல்களும் வெளியாகி இருந்தது.
இதற்கு அடுத்தபடியாக, சமீபத்தில் வாரிசு படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த நிலையில், வாரிசு படத்தின் நடிகை ராஷ்மிகா மந்தனா Behindwoods TV சேனலுக்கு பிரத்யேக பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், வாரிசு திரைப்படம் குறித்தும், நடிகர் விஜய் குறித்தும் பல்வேறு சுவாரஸ்ய தகவல்களையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.
அப்போது வாரிசு படம் சீரியல் மாதிரி இருக்குமா என்ற கேள்விக்கு பதில் அளித்த நடிகை ராஷ்மிகா மந்தனா, வெறும் தலையை மட்டும் ஆட்டி "இல்லை" என சைகை காட்டி இருந்தார்.
அதே போல, வாரிசு Vs துணிவு Clash குறித்து பேசிய ராஷ்மிகா, "சத்தியமா என்ன சொல்றதுன்னு தெரியல. ஆனா இது எல்லாமே படங்கள் தான். நாங்கள் ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்களுக்காக திரைப்படங்கள் செய்கிறோம். எந்தப் படத்தை பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறதோ அந்த படத்தை மக்கள் பார்க்கலாம். ஒரு படத்தை மட்டும் பார்க்க வேண்டும் என்று கிடையாது அல்லவா?. இரண்டு படத்தை கூட மக்கள் பார்க்க விரும்பினால் சென்று பார்க்கலாம்" என பதில் கூறினார்.