பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தளபதி விஜய் நடிப்பில் உருவாகி உள்ள 'வாரிசு' திரைப்படம் தற்போது திரை அரங்குகளில் வெளியாகி உள்ளது. வாரிசு திரைப்படத்தை இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கி உள்ளார்.
இந்த படத்தில் நடிகர் விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா முதல் முறையாக இணைந்து நடித்துள்ளார். இவர்களுடன் பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, குஷ்பு, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா எனப் பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு, ஹரி மற்றும் ஆஷிஷோர் சாலமன், விவேக் இணைந்து கதை & கூடுதல் திரைக்கதை எழுதி உள்ளனர். இசை மற்றும் ஒளிப்பதிவு முறையே எஸ் தமன் மற்றும் கார்த்திக் பழனி கவனித்துள்ளனர். கேஎல் பிரவீன் படத்தொகுப்பாளராக பணியாற்றி உள்ளார்.
மேலும் இந்த படத்தை தயாரிப்பாளர்கள் தில் ராஜு & ஷிரிஷின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸின் கீழ் தயாரித்துள்ளனர். வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா, கடந்த டிசம்பர் 24 ஆம் தேதியன்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் வைத்து நடைபெற்றிருந்தது. இந்த நிகழ்வில், விஜய், ராஷ்மிகா மந்தனா, எஸ்.ஏ.சந்திரசேகர், ஷோபா சந்திரசேகர், வாரிசு பட தயாரிப்பாளர் தில் ராஜூ, இயக்குனர் வம்சி பைடிபள்ளி, இசையமைப்பாளர் தமன், சங்கர் மகாதேவன், டிரம்ஸ் சிவமணி, பிரகாஷ் ராஜ், சரத்குமார், நடிகர் ஷாம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தற்போது வாரிசு திரைப்படம் திரை அரங்குகளில் வெளியாகி உள்ள நிலையில், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறது. இந்த நிலையில், வாரிசு பட நடிகை ராஷ்மிகா மந்தனா Behindwoods TV சேனலுக்கு பிரத்யேக பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், வாரிசு திரைப்படம் குறித்தும், நடிகர் விஜய் குறித்தும் பல்வேறு சுவாரஸ்ய தகவல்களையும் அவர் பகிர்ந்து கொண்டார்.
முன்னதாக வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசியிருந்த நடிகை ராஷ்மிகா, கில்லி படம் பார்த்த பிறகு தான் நடிகர் விஜய்யின் ரசிகையாக மாறியதாக குறிப்பிட்டு இருந்தார்.
அப்படி ஒரு சூழலில், இந்த பேட்டியின் போது "கில்லி படத்தில் திரிஷா நடித்த தனலட்சுமி கதாபாத்திரத்தை நீங்கள் நடிக்கும் ஒரு வாய்ப்பு வருகிறது. அதே போல காதலுக்கு மரியாதை படத்தில் நடிகை ஷாலினி கதாபாத்திரம் வருகிறது இந்த இரண்டு கதாபாத்திரங்களில் எந்த கதாபாத்திரத்தில் நடிக்க நீங்க விரும்புவீர்கள்?" என்ற கேள்வி கேட்கப்பட, இதற்கு பதிலளித்த நடிகை ராஷ்மிகா, "நான் இரண்டு கதாபாத்திரத்திலும் நடிக்க வேண்டும் என விரும்புகிறேன். இரண்டும் மிகவும் கூலான கேரக்டர். நான் ஒரு நடிகை, அனைத்து கதாபாத்திரங்களை நடிக்க வேண்டும் என ஆசைப்படுவேன்" என சிரித்துக்கொண்டே இரு கதாபாத்திரங்களில் நடிக்க விருப்பப்படுவதாக ராஷ்மிகா தெரிவித்தார்.