மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ ஜெயலலிதாவின் வாழக்கையை தழுவி புனைவாக உருவாக்கப்பட்ட Queen என்ற வெப் தொடர் உருவாக்கப்பட்டது.
ஜெயலலிதா Biopic
கடந்த 2019 ஆம் ஆண்டு, கௌதம் மேனன், 'கிடாரி' பிரசாத் முருகேசன் இணைந்து இயக்கிய ‘Queen’ வெப் சீரிஸ் MX ப்ளேயர் பிளாட்ஃபார்மில் வெளியானது. மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி புனைவாக உருவாக்கப்பட்ட இந்த வெப் சீரிஸில் ஜெயலலிதா கேரக்டரில் நடிகை ரம்யா கிருஷ்ணன் நடித்திருந்தார். ஜெயலலிதாவின் குழந்தை பருவ கதாபாத்திரத்தில் அனிகா நடித்திருந்தார்.
கலைஞர்கள்…
ஜெயலலிதாவின் கேரக்டரில் நடித்த ரம்யாகிருஷ்ணன் நடை, உடை, பாவனை பேச்சு என அனைத்திலும், தனக்கே உரிய ஸ்டைலிலும், ஜெயலலிதாவின் பிம்பத்தையும் கண்முன் நிறுத்தி ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி இருந்தார். ரம்யா கிருஷ்ணர் ஜெயலிதாவாக நடிக்க, எம்ஜிஆராக மலையாள நடிகர் இந்திரஞ்சித் சுகுமாரன் நடிக்கிறார். ஜெயலலிதாவை வெவ்வேறு வயதில் அனிகாவும் அஞ்சனா ஜெயபிரகாஷும் நடித்தனர். இவர்களுடன் சோனியா அகர்வால், வனிதா கிருஷ்ணசந்திரன், விஜி சந்திரசேகரன் ஆகியோரும் நடித்தனர். இந்த சீரிஸ் ரசிகர்கள் மத்தியில் பரவலானக் கவனத்தைப் பெற்றது.
Queen 2
இந்த வெற்றியை அடுத்து தற்போது Queen சீரிஸின் இரண்டாவது சீசன் உருவாக்கப்பட்டு வருகிறது. இரண்டாவது சீசனுக்கான படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கியுள்ளது. படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட BTS புகைப்படங்கள் சிலவும் வெளியாகின. அந்த புகைப்படங்களில் ஜெயலலிதா தோற்றத்தில் ரம்யா கிருஷ்ணன் காட்சியளிக்கிறார். இந்த இரண்டாவது சீசனையும் பிரசாந்த் முருகேசனுடன் இணைந்து கௌதம் மேனன் இயக்குகிறார்.
சோனியா அகவர்வால்…
இந்நிலையில் இப்போது நடிகை சோனியா அகர்வால் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படப்பிடிப்புத் தளத்தில் ரம்யா கிருஷ்ணனோடு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இப்போது இணையத்தில் கவனம் பெற்று வருகின்றன. முதல் சீசனில் சோனியா அகர்வால் ஜெயலலிதாவின் தாயார் சந்தியா வேடத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது அவர் படப்பிடிப்பில் கலந்துகொள்வதால் இரண்டாவது சீசனிலிலும் அவர் கதாபாத்திரம் இடம்பெறும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.