பிக்பாஸ் வீட்டில் நடந்து கொண்டு இருக்கும் பொம்மை டாஸ்க் சூடு பிடித்துள்ளது.
டாஸ்படி, போட்டியாளர்கள் சக போட்டியாளரின் பெயர் எழுதப்பட்ட பொம்மையை எடுத்துக் கொண்டு கூடாரத்துக்குள் ஓட வேண்டும். குறிப்பாக தங்கள் பெயர் எழுதப்பட்ட பொம்மையை தூக்கிக் கொண்டு ஓடக் கூடாது. எந்த போட்டியாளர் கடைசியாக வருகிறாரோ அவர் கையில் இருக்கும் பொம்மைக்கு பொம்மையில் எழுதப்பட்ட போட்டியாளர் இந்த போட்டியில் இருந்து வெளியேற்றப்படுவார்.
இந்த டாஸ்க் மூலம் போட்டியாளர்கள் தங்களுக்கு பிடித்த ஒருவரை காப்பாற்றலாம், அல்லது தங்களுக்கு வேண்டாத ஒரு போட்டியாளரை இந்த போட்டியில் இருந்து வெளியேற்ற வைக்கும் விதமாக, அவர்களின் பெயர்கள் எழுதப்பட்ட பொம்மையை எடுத்துக்கொண்டு, கடைசி நபராக கூடாரத்துக்குள் வந்தால் போதும்.
இந்த போட்டியிலும் ஏகப்பட்ட சண்டை சச்சரவுகள் வர செய்தன. குறிப்பாக அக்ஷராவை தடுக்கும் பொருட்டு, அவரை அங்கும் இங்கும் நகர முடியாமல் நிரூப் தன் பலத்தால் பிடித்து ஓரிடத்தில் நிறுத்திக் கொண்டது, இதனை கண்டு அதிருப்தி அடைந்த வருண் அடுத்த ரவுண்டில் நிரூப்பின் பொம்மையை எடுத்து வைத்துக்கொண்டு கூடாரத்துக்குள் செல்லாமல் வெளியே நின்று கொண்டிருந்தது, இதனால் நிரூப்புக்கும் வருணுக்கும் நடந்த வாக்குவாதம், அதன் தொடர்ச்சியாக சிபிக்கும் அக்ஷராவுக்கும் நடந்த வாக்குவாதம் என ஒரே ரணகளமானது பிக்பாஸ் வீடு.
குறிப்பாக இந்த சண்டைகளில் ஆக்ரோஷமாகவும், அதிக கோபத்துடனும் தடித்த வார்த்தைகளுடனும் அனைவரும் பேசிக்கொண்டதை காண முடிந்தது. இந்த டாஸ்கைத் தொடர்ந்து, அந்த பொம்மைகளை பற்றிய குணாதிசயத்தை விளக்க வேண்டும். அதாவது அந்த பொம்மையை சொல்வதுபோல் பொம்மைகளுக்குரிய போட்டியாளரை பற்றிய மதிப்பீட்டை ஒவ்வொரு போட்டியாளரும் முன்வைக்க வேண்டும்.
இந்நிலையில் பலருடைய பெயர்கள் எழுதப்பட்ட பொம்மைகளை எடுத்து அவற்றை பற்றி, ஒரு தொழில்முறை பொம்மை விற்பவர் போலவே நகைச்சுவையாக பேசிய ராஜூ ஐக்கி ஒரு பேய் பொம்மை என்றும், தாமரை அமைதியாக இருக்கும் பொம்மை என்று நினைத்தால், அது அனபெல் பொம்மை என்று கடைசியாக தெரிந்தது என குறிப்பிட்டார்.
இதேபோல் நிரூப் மற்றும் சிபி இருவரையும் சொந்தமாகவும் சுயமாகவும் விளையாடும் பொம்மைகள் என்று குறிப்பிட்ட ராஜூ, அக்ஷரா பொம்மை யாரை எப்படி பயன்படுத்தி, யாருடன் இருந்தால் வெற்றி என்கிற உத்தியை பயன்படுத்தி சுயமாக விளையாடும் பொம்மை என்றும் குறிப்பிட்டார்.
இதேபொல் பிரியங்கா, அந்த பொம்மை பல நேரங்களில் எப்படி இருக்கும் என அதுக்கே தெரியாது; அத்தனை இயல்பான பொம்மை என குறிப்பிட்டிருந்தார். இப்படி பேசிக்கொண்டே வந்த ராஜூ, வருண் பற்றி குறிப்பிடும் போது, “இது ஒரு இலுமினாட்டி பொம்மை” என்று நகைச்சுவையாக குறிப்பிட்டார். அதே சமயம் வருண் பொம்மை சுய புத்தியுடன் செயல்படுவதாகவும் ராஜூ தெரிவித்திருந்தார்.