கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசன் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது .
இந்நிகழ்ச்சியில் தற்போது 18 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கின்றனர். சமையல், பாத்திரம் கழுவுதல், வீட்டை சுத்தம் செய்தல், பாத்ரூம் உள்ளிட்ட தனித்தனி பிரிவுகளுக்கு கேப்டன்கள் நியமிக்கப்பட்டிருக்கும் நிலையில், இந்தப் பிரிவுகளின் கீழ் அணிகளாக பல்வேறு போட்டியாளர்கள் பிரிக்கப்பட்டு விட்டனர். இந்த டீம்களுக்கு கேப்டன்களாக சின்னபொண்ணு, நமீதா, ராஜூ மற்றும் பாவனி ரெட்டி ஆகியோர் இருக்கின்றனர்.
இந்த நிலையில் முதல் கட்டமாக ‘மாஸ்டர்’ பட நடிகர் சிபியை பிக்பாஸ் கன்ஃபெஷன் அறைக்கு அழைத்திருக்கிறார். இந்த சீசனில் முதல்முறை கன்ஃபெஷன் அறைக்கு அழைக்கப்பட்டவர் மாஸ்டர் சிபிதான். தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான மாஸ்டர் திரைப்படத்தில் சிபி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மாஸ்டர் சிபி என்று அதனால் அழைக்கப்படுகிறார்.
மேலும் வஞ்சகர் உலகம் என்கிற ஒரு ஓடிடி படத்திலும் நடித்திருக்கும் சிபி, போட்டியாளர்கள் முன்னிலையில் படித்து காட்டுமாறு பிக்பாஸ் கூறியிருந்த லெட்டரை படித்து காட்டினார். அதன்படி ஒவ்வொரு போட்டியாளரும் தங்களுடைய கதையை அனைவர் முன்னிலையிலும் சொல்ல வேண்டும். அதை விரும்புபவர்கள் லைக்ஸ், டிஸ்லைக் மற்றும் லவ் உள்ளிட்ட எமோஜிகளை அங்கிருக்கும் ஒரு மேக்னடிக் போர்டில் பொருத்துவார்கள்.
அந்தவகையில் தம்முடைய பெற்றோரை மிஸ் பண்ணுவது, நாட்டுப்புறக்கலையில் கஷ்டப்பட்டது, அவமானப்பட்டது, கலைஞர்களுக்கு உதவுவது, கச்சேரிக்காக பட்ட பாடு, திருமண வாழ்க்கை, குழந்தைகள், குடும்ப கஷ்டம் என அனைத்தையும் சொல்லி, தான் வழக்கமாக பாடும் அம்மா பாடலை பாடியபடி சின்னப்பொண்ணு தன் கதையை கூறியிருந்தார்.
முடிவில் ஒரு பாடலையும் பாடி இருந்தார். இதற்கு ராஜூ டிஸ்லைக் செய்திருக்கிறார். இந்த விஷயம் தான் பரபரப்பு ஆகியுள்ளது. அதை விட இதற்கு ராஜூ சொல்லியிருக்கும் காரணம் தான் ரசிகர்கள் மத்தியில் இன்னும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
ஆம், இதற்கு ராஜூ சொன்ன காரணமோ,“கலைஞர்கள் கஷ்டத்தை சொல்லிதான் ஆகவேண்டும். ஆனால் பாடலில் இருக்கும் வாழ்க்கை கதை சொன்ன விதத்தில் இல்லை .. தேவையில்லாத காட்சிகள் கொண்ட படத்தின் க்ளைமேக்ஸ் மட்டும் சூப்பராக அமைந்தது போன்று இருந்தது.” என்பதுதான்.
இதுகுறிஒத்து விளக்கம் சொன்ன ராஜூ, “நான் தவறாக சொல்லவில்லை. உங்கள் பயணத்தை குறை சொல்லவில்லை. நீங்கள் கதை சொன்ன விதத்தை மட்டுமே சொல்கிறேன். எல்லாரும் சூப்பர்னு சொன்னால் நாம் வளர மாட்டோம். வழியில் ஒரு தடுப்புச் சுவர் இருந்தால் உடைத்துவிட்டு வளருவோம். நான் அப்படி ஒரு தடுப்பாக இருக்கிறேன்!” என குறிப்பிட்டுள்ளார்.
முதலில், “நான் அப்படியெல்லாம் கஷ்டப்பட்டு கலைத்துறையில் முன்னேறி வந்ததை சொன்னேன்.. அவ்வளவுதான்ப்பா” என வெகுளியாக பதிலளித்த சின்ன பொண்ணு, பின்னர், “அதனால் என்ன? ராஜூ சொன்னதில் தவறில்லை” என்று கூறிவிட்டார்.