பிக்பாஸ் வீட்டுக்குள் பட்டிக்காடா.. பட்டணமா.. என்று ஒரு பட்டிமன்றம் வைக்கப்பட்டது.
இதில் பட்டிக்காடு அணியில் கிராமவாசிகளாக அபினவ், ராஜூ, தாமரை, சின்னப்பொண்ணு, மதுமிதா, அக்ஷரா, ஐக்கி ஆகியோர் இருந்தனர். இதேபோல் பட்டணமா அணியில் நகர வாசிகளாக பிரியங்கா, சிபி, நிரூப், வருண், சுருதி உள்ளிட்டோர் இருந்தனர். இந்த பட்டிமன்ற நிகழ்வுக்கு நடுவராக இசைவாணி நின்றுகொண்டிருந்தார்.
இந்த பட்டிமன்றத்தில் கிராமத்து வாசிகளின் பேச்சு, இடம் பொருள் ஏவல், ஆடை அணிதல் என பல்வேறு விஷயங்களை நகரவாசிகளுடன் ஒப்பிட்டு பேசினார் ராஜூ. அவர் பேசும்பொழுது பெரும்பாலும் கிராமவாசிகள் ஆங்கிலத்தில் பேசுவதில்லை என்றும் அதேசமயம் நகரவாசிகள் கமல் சார் வருவதற்கு கொஞ்ச நேரத்துக்கு முன்னர் வரை கூட ஆங்கிலத்தில் பேசி சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள் என்று பிரியங்கா உள்ளிட்டோரை குறிப்பிட்டு சுட்டிக்காட்டி காமெடியாக தெரிவித்தார்.
இதேபோல் தாமரை சுருதியின் ஆடையை விமர்சித்திருந்தார். மேலும் பிரியங்கா கொஞ்சம் அடக்கமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இதனை அடுத்து சிபி கொஞ்சம் கொந்தளித்து, ‘நீங்கள் அடக்கமாக இருக்கிறீர்களா..? ஆடை அணிவது என்பது சுருதியின் தனி உரிமை’ என்று பேசத் தொடங்கினார்.
இப்படி போன பேச்சில் மீண்டும் தாமரை ஏதோ பேச வர அப்போது தாமரையை தடுத்து உட்கார வைத்த ராஜூ, ‘நீ இப்படி எல்லாவற்றையும் நேராக நேராக பேசினால்.. அவர்களும் நேராக வருவார்கள்.. அப்புறம் அவ்வளவுதான் மிகப்பெரிய விபத்து ஆகிவிடும்’ என்று கூறி அமர வைத்து விட்டார்.
அதன் பிறகு தாமரை பேசவே இல்லை. இருப்பினும் சுருதி பேசும்பொழுது டிரெஸ்ஸிங் ரூம் சண்டையில் தன்னை அந்த அணியை சேர்ந்த ஒருவர் காயப்படுத்திவிட்டதாக மறைமுகமாக தாமரையை சுட்டிக்காட்டி பேசினார். டிரெஸ்ஸிங் ரூமில் தாமரை ஆடை மாற்றும்போது பாவனி மற்றும் சுருதி இருவரும் திட்டமிட்டு தாமரையிடம் இருந்த காயினை திருட, பாவனியோ தாமரைக்கு டவல் பிடித்து உதவி செய்வது போல் திசை திருப்பிக் கொண்டிருந்தார்.
ஆனால் தன் நிலை கருதி அமைதியாக இருந்த தாமரை, எல்லாவற்றையும் கவனித்திருந்துவிட்டு டிரெஸ் மாற்றிய பிறகு வெளியே வந்து, ‘இது துரோகம்.. இந்த நிலைமையிலா இப்படி பண்ணுவ? உன்ன எவ்வளவு நம்பினேன்?’ என்று சுருதியை குறிப்பிட்டு பேசியிருந்தார். பாவனியும் தான் தாமரைக்கு உதவி செய்ததை தாமரை புரிந்துகொள்ளவில்லை என்று சொல்லியிருந்தார். இந்த நிலையில் மேற்கொண்டு தாமரையை பேசவிடாமல் ராஜூ கட்டுப்படுத்தி மிகப்பெரிய விபத்து ஆகிவிடும் என்று சொல்லி அமர வைத்தது குறிப்பிடத்தக்கது.