பிக்பாஸ் வீட்டில் பள்ளிக் காலங்களை நினைவு படுத்தும் கனா காணும் காலங்கள் டாஸ்க் நடைபெற்று வந்தது.
இதில் ராஜூ ஏற்றிருந்த வேடம் மிக முக்கியமான வேடம். திருமணமான உடனேயே மனைவியின் நினைவுடன் வேலைக்கு வந்து விட்ட தமிழாசிரியரின் கதாபாத்திரத்தில் ராஜூ நடந்து கொண்டிருந்தார். இதனிடையே மாணவர்களுக்கு திருக்குறள் சொல்லிக் கொடுப்பது, எதை பேசினாலும் தமிழில் பேச செல்வது, அவ்வாறு தவறாக பேசினால் அறிவுறுத்துவது உள்ளிட்ட பணிகளை திறம்பட செய்து வந்தார்.
அந்த வகையில்தான் அக்ஷராவுக்கு திருக்குறள் சொல்லித்தர போய், அந்த திருக்குறளை மனப்பாடம் செய்து மீண்டும் சொல்ல வேண்டும் என்று அழுத்தம் திருத்தமாக கூற, சிபி அதை வலியுறுத்த அக்ஷரா டென்ஷனான சம்பவம் நடந்தது.
இதனைத் தொடர்ந்து ஒரு வழியாக இந்த டாஸ்க் இறுதி நாளுக்கு வந்தது. அதில் மாணவர்களுக்கு கடைசி நிகழ்வாக அனைவரும் நாப்பிறழ்ச்சி சொற்றொடர்களை கூற வேண்டும். இதில் விதவிதமான நாப்பிறழ்ச்சி வாக்கியங்களை ராஜூ கூற, அனைவரும் அவற்றை பத்து முறை கடகடவென கூற வேண்டும் என்கிற டாஸ்க் நடந்தது.
இதன் இறுதியில் ராஜூ, “சரி எல்லாம் முடிந்தது. உங்களுடைய தமிழாசிரியரின் பெருமைகளைப் பற்றி யாரேனும் சொல்ல விரும்பினால் சொல்லலாம்” என்று சொன்னவுடன் மாணவர்களாக இருந்த அனைவருமே ராஜூ பற்றி நல்லவர் வல்லவர் என்று சொல்லத் தொடங்கி கூச்சலிட்டனர். அப்போது ராஜூ, “இருங்கள் இருங்கள்.. ஒவ்வொருவராக சொல்லுங்கள்” என்று தன்னைப் பற்றி பெருமையாக அந்த மாணவர்கள் சொல்வதை ஆசையுடன் கேட்பதற்காக அனுமதித்தார்.
அவ்வளவுதான் உடனே பிக்பாஸ் பெல் அடித்துவிட்டார். ராஜூ கனவுக்கு பெரிய ஆப்பு வைத்துவிட்டார். இதனை தொடர்ந்து மற்ற ஆசிரியர்களாக இருந்த அமீர் உள்ளிட்டோர் ராஜூவை கட்டம் கட்டி செல்லமாக அடிக்க சென்றுவிட்டனர்.