கொரோனா பிரச்சனையின் காரணமாக... பலர் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் தவித்து வருகிறார்கள். அதே நேரத்தில் பிழைப்பு தேடி வந்த இடத்திலும் ஊரடங்கு காரணமாக வேலை இல்லாமல் போனது. இதன் எதிரொலி அன்றாடம் சாப்பிடும் உணவுக்கே பலர் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறார்கள்.
கொரோனா பிரச்னையால் பல துறைகள் முடங்கிக் கிடக்க எளிய மக்கள் வேலையின்றி பசி, பட்டினியால் வாடி வருகின்றனர். அதிலும் வெவ்வேறு ஊர்களில் சிக்கிக் கொண்டவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்ப இயலாமல் மிகவும் தவித்து வருகின்றனர். இவ்வகையில் பிற மாநிலங்களில் வேலையின்றி தவிக்கும் தமிழர்களின் பாடும் மிகவும் பிரச்சனைக்குரியதாகி உள்ளது.
இந்நிலையில் இந்தப் பிரச்னைக்கு உரிய நேரத்தில் அரும் தொண்டாற்றி வருகிறார் நடிகர் ராகவா லாரன்ஸ். தனது தாய் அறக்கட்டளை மூலமாக இதுவரை அவர் செய்துள்ள உதவிகள் யாராலும் மறக்க முடியாது.
சமீபத்தில் குஜராத்துக்கு கட்டட வேலைக்காக சென்ற சிலர் ஊரடங்கு உத்தரவால் வெளியே வர முடியாத நிலையில், குழந்தைகள் உட்பட பத்து பேர் சாப்பாட்டுக்கு மிகவும் கஷ்டப்படுவதாக சொல்லி வெளியிட்ட ஒரு வீடியோ அனைவரையும் கலங்கச் செய்துவிட்டது, இந்த வீடியோவை தனது டிவிட்டரில் வெளியிட்ட ராகவா லாரன்ஸ் அத்துடன் நில்லாமல் தமிழ அரசு மற்றும் குஜராத் அரசுக்கு அக்குடும்பத்தை விரைவில் மீட்டுத் தரும்படி கோரிக்கை விடுத்தார்.
தற்போது ராக லாரன்ஸ் இன்னொரு டிவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அந்த தமிழ் குடும்பம் வசிக்கும் ராஜ்கோட் பகுதியின் மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று அக்குடும்பத்துக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்துள்ளார். தேவையெனில் அக்குடும்பத்தை தமிழகத்துக்குத் திருப்பி அனுப்பவம் குஜராத் அரசு முன் வந்துள்ளது. இதைத் தொடர்ந்து ராகவா லாரன்ஸ் குஜராத் முதல் அமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.