பிரபல திரைப்பட இயக்குநர் ராஜீவ் மேனனின் தாயார் இன்று காலமானார்.
இந்திய மொழி திரைப்படங்கள் பலவற்றுள் இயக்குநராகவும் ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றியவர் ராஜீவ் மேனன். இயக்குநர் மணி ரத்னத்தின் பாம்பே (1994) திரைப்படத்தின் மூலம் பிரபலம் ஆன இவர், பின்னர் குரு (2007) மற்றும் கடல் (2013) உள்ளிட்ட பிற திரைப்படங்களில் மணி ரத்னத்துடன் பணியாற்றியவர்.
இவரது இயக்கத்தில் வெளியான மின்சார கனவு (1997) மற்றும் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் (2000) படங்கள் நல்ல விமர்சனங்களை பெற்றதுடன் இன்று வரை முத்திரை பதித்த படங்களாக உள்ளன. இதேபோல், அண்மையில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் ‘சர்வம் தாளமயம்’ எனும் திரைப்படத்தை ராஜீவ் மேனன் தயாரித்து இயக்கினார்.
இந்நிலையில் இவரது தாயார் திருமதி.கல்யாணி மேனன் (80), காவேரி மருத்துவமனையில் இன்று (ஆகஸ்டு 02, 2021) மதியம் 12 மணிக்கு இயற்கை எய்தினார். கல்யாணி மேனன் அவர்களுக்கு, இயக்குநர் ராஜீவ் மேனன் தவிர கருணாகரன் மேனன் என்ற மகனும் உள்ளார்.
திருமதி.கல்யாணி மேனனின் இறுதி சடங்கு நாளை பிற்பகல் 2 மணிக்கு பெசன்ட் நகரில் நடைபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது. கல்யாணி மேனன் சில அரிய திரைப்பட பாடல்களையும் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.