சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் கடந்த ஜனவரி 9 ஆம் தேதி வெளியான 'தர்பார்' படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. லைக்கா புரொடக்ஷன்ஸ் சார்பாக சுபாஷ்கரன் இந்த படத்தை தயாரித்துள்ளார்.
இந்த படத்தில் ரஜினிகாந்த்திற்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க, சுனில் ஷெட்டி, நிவேதா தாமஸ், யோகி பாபு, ஸ்ரீமன், பேபி மானஸ்வி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். அனிருத் இசையமைத்த இந்த படத்துக்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்திருந்தார்.பொங்கல் விடுமுறையை முன்னிட்டு வெளியாகியுள்ள சர்வதேச அளவில் 150 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் சரண்யா என்ற லோக்கல் சேனலில் தர்பார் திரைப்படம் ஒளிபரப்பாகி உள்ளது. இது தர்பார் படத்தின் தயாரிப்பு தரப்புக்கு தெரியவர, சட்ட விரோதமாக திரைப்படத்தை ஒளிபரப்பியவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க அறிக்கை வெளியிட்டனர். மேலும் இது குறித்து மதுரை மாவட்ட கமிஷ்னரிடம் புகாரளிக்கப்பட்டது. இதனை அடிப்படையாகக் கொண்டு சரண்யா டிவியின் உரிமையாளர் மீது போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.
இது குறித்து தர்பார் படத்தின் மதுரை வினியோகஸ்தர் பிரவீன் தெரிவித்தது: தொலைக்காட்சியில் தர்பார் படத்தை ஒளிபரப்பியவர்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால், இன்னும் அவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்’. இதைத் தொடர்ந்து ஒளிபரப்ப பயன்படுத்திய கணினி, சிபியு, ஒளிபரப்பு தளவாடங்கள் அனைத்தும் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.