நடிகர் ஒய் ஜி மகேந்திரனின் சாருகேசி நாடகத்தின் விழா மற்றும் அது திரைப்படமாக உருவாவது குறித்த அறிவிப்பு விழா, சென்னை தியாகராய நகரில் உள்ள வாணி மஹாலில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் விருந்தினராக கலந்து கொண்டார்.
மேலும் இந்த விழாவில் பேசி இருந்த நடிகர் ரஜனிகாந்த், YGP நாடக குழுவை பாராட்டியும், இதில் இருந்து உருவாகிய நடிகர்கள் குறித்தும் என பல்வேறு சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்து கொண்டார். தொடர்ந்து ஒய்.ஜி. மகேந்திரனுக்கு நன்றி சொல்லியும் பேசி இருந்தார் ரஜினிகாந்த்.
"என் மனைவியை எனக்கு அறிமுகம் செய்து வைத்ததில் நான் ஒய்.ஜி. மகேந்திரனுக்கு நன்றி கடன்பட்டுள்ளேன். என் கல்யாணம் நடக்கிறதுக்கே அவர்தான் முக்கிய காரணம். இப்ப 73 வயசுல நான் இருந்தாலும், ஆரோக்கியமா இருக்கேன்னா அதுக்கு காரணம் என்னோட மனைவி தான்.
கண்டக்டரா இருக்கும் போது எனக்கு ரெண்டு வேளையும் நான் வெஜ் வேணும், அதுவும் மட்டன் தான் வேணும். டெய்லி டிரிங்க்ஸ் போடுறது, சிகரெட் எத்தனை பாக்கெட்ன்னே தெரியாது. அதுவும் பஸ் கண்டக்டரா இருக்கும் போது இப்படி, இன்னும் பணம், பேர், புகழ்லாம் வரும்போது எப்படி இருந்திருப்பேன்னு நினைச்சு பாருங்க. காலையிலேயே பாயா, ஆப்பம், சிக்கன் 65.
அப்ப எல்லாம் சைவம் சாப்பிடுறவங்கள பாத்தா பாவமா இருக்கும். ஐயோ என்னங்கடா இது. இத எப்படி சாப்பிடுறாங்க அப்படின்னு சொல்லி தோணும். இந்த சிகரெட், டிரிங்க்ஸ், நான் வெஜிட்டேரியன் இந்த மூணுமே ரொம்ப Deadly காம்பினேஷன்.
அந்த மாதிரி இருந்த என்னை, அன்பால மாத்துனவங்க லதா. இந்த மாதிரி பழக்கம் எல்லாம் என்ன சொன்னாலும் விட முடியாது. அதெல்லாம் ரொம்ப மாத்தி, கரெக்டா கொண்டு வந்து சரியான மருத்துவர்களை அறிமுகப்படுத்தி அவங்களால சொல்ல வச்சு ஒரு ஒழுக்கம் கொண்டு வந்து என்ன மாத்துனது லதா அவர்கள் தான்" என ரஜினிகாந்த் பேசி உள்ளார்.