அண்ணாத்த படத்துக்கு ரிவ்யூஸ் அவ்வளவு சாதகமாக இல்லை. படம் ரிலீஸான பிறகு சனிக்கிழமை நைட்டில் இருந்தே மழை. மழைனா சாதாரண மழை இல்லை.. என்று ரஜினிகாந்த் பேசியுள்ளார்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ‘அண்ணாத்த’ படம் கடந்த நவம்பர் 4ஆம் தேதி வெளியானது. இந்தப் படத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், ஜெகபதி பாபு உள்ளிட்டோர் நடித்திருந்தனர். டி.இமான் இசையமைத்திருந்தார். அண்ணாத்த திரைப்படம் இன்றுடன் 50 நாட்களைக் கடந்துள்ளது.
இதையடுத்து ஹூட் ஆப்பில் ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் ரஜினி. அதில், “நான் கடந்த முறை பேசியபோது டைரக்டர் சிவா பற்றியும், அண்ணாத்த படப்பிடிப்பில் எனக்கு நடந்த பல சம்பவங்கள் பற்றியும் பேசுகிறேன் என்றேன்.
அதில் அவர் கூறியுள்ளதாவது : " நான் வேலை பார்த்த முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் டி.ஆர். ராமண்ணா அவர்கள். பழம்பெரும் இயக்குநர், குப்பத்து ராஜா படம். அதன் பிறகு ஏ.சி. திரிலோக்சந்தர், வணக்கத்திற்குரிய காதலி. இவங்க இரண்டு பேரும் செட்டில் இருந்தால் அமைதியாக இருக்கும். யாரும் பேச மாட்டாங்க. கேமரா மேன் கிட்ட மட்டும் ஷாட் சொல்வாங்க.
ஸ்டார்ட், கேமரா, ஆக்ஷன் அவ்வளவு தான் பேசுவாங்க. வேறு எதுவும் பேச மாட்டாங்க. எல்லா வேலையும் தானா நடக்கும். அதுக்கப்புறம் வந்து சிவா தான். டி.ஆர். ராமண்ணா, ஏ.சி. திரிலோக்சந்தர் மாதிரி சேர் போட்டு உட்கார்ந்திருப்பார். எல்லோர் மீதும் அன்பு காட்டுகிறார். பாசமாக பார்த்துக்கிறார். ரொம்ப நாள் பழகிய நண்பர் மாதிரி சிவா அவர்கள் எனக்கு ரொம்ப நெருக்கமாகிவிட்டார்.
அண்ணாத்த படம் டிசம்பர் 19, 2019ல் ஸ்டார்ட் பண்ணோம். 35 நாட்கள் ஷூட்டிங் முடித்த பிறகு மார்ச் இறுதியில் மீண்டும் படப்பிடிப்பை தொடர முடிவு செய்தபோது கொரோனா வந்துடுச்சு. கொரேனா வந்த பிறகு 9 மாதங்கள் கேப். 9 மாதங்கள் கழித்து டிசம்பர் 14ம் தேதி ஷூட்டிங்கிற்கு போனோம். எல்லோரும் மாஸ்க் அணிய வேண்டும், கோவிட் டெஸ்ட் பண்ண வேண்டும் என்று ஸ்ட்ரிக்டாக ஷூட்டிங் பண்ணோம்.
அப்பொழுது கீர்த்தி சுரேஷின் உதவியாளருக்கு கொரோனா வந்துடுச்சு. அவருக்கு 5 நாட்களுக்கு முன்பே கொரோனா வந்திருக்கு. யாருக்குமே தெரியல. எல்லோருக்கும் ஷாக். டேக்கில் மட்டும் தான் மாஸ்க் இல்லாமல் இருப்போம். கீர்த்தி சுரேஷுடன் நெருங்கி நடித்தேன். உதவியாளரும் கூடவே இருந்தார். இதை பார்த்து எல்லோருக்கும் ஷாக். எப்படி நீங்க சொல்லலனு சொல்லி திட்டினார் சிவா.
இதையடுத்து ஷூட்டிங்கை நிறுத்தச் சொன்னார் கலாநிதி மாறன். எனக்கு கோவிட் டெஸ்ட் எல்லாம் எடுத்த பிறகும், நெகட்டிவ் வந்தும்கூட லங்க்ஸை எல்லாம் ஸ்கேன் பண்ணனும்னு டாக்டர்கள் சொன்னார்கள். அப்பல்லோவில் இரண்டு நாட்கள் இருந்துவிட்டு வந்தோம். அதன் பிறகு 3 மாதங்கள் கழித்து ஷூட்டிங் முடித்து தான் ஆக வேண்டும்னு வந்தோம். கிளைமாக்ஸில் எல்லாம் 700, 800 பேர் இருந்தார்கள். 18 நாள் நைட்டில் எடுத்தது. அந்த 700, 800 பேரும் ஜூனியர் ஆர்டிஸ்டுகள். அவர்களுக்கு தினமும் கொரோனா டெஸ்ட் பண்ணனும். அது பண்ணி வந்த பிறகு ஷாட்டில் மட்டும் தான் 800 பேரும் மாஸ்க் எடுக்கணும்.
நீங்கள் கூட்டத்தில் இருக்கக் கூடாது, யாரும் டச் பண்ணக் கூடாதுனு என்னிடம் டாக்டர்ஸ் சொல்லியிருக்காங்க. கிளைமாக்ஸில் நான் மொட்டை மாடியில் நின்று நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் எங்கெங்கே போறாங்கனு பார்த்து இன்ஸ்ட்ரக்ஷன் கொடுக்கிற மாதிரி சீன் அது. 2 ஆண்டுகளுக்கு முன்பே இயக்குநர் திட்டமிட்டது. கொரோனாவுக்காக அப்படி செய்யவில்லை. இது ஆண்டவனின் செயல்.
செகண்ட் வேவ் ஸ்டார்ட் ஆகிடுச்சு. ஆந்திராவில் உச்சத்தில் இருக்கு. ஏற்கனவே 2 வருஷம் ஆகிடுச்சு. இன்னும் 2 நாள் இருக்கு, ஷூட்டிங் முடிக்கணும். மார்னிங்கில் இருந்து லாக்டவுன் என்று தெலுங்கானா அரசு அறிவிக்கிறாங்க. அன்னைக்கு நைட் வந்து ஷூட்டிங் முடிகிறது. இது கூட ஆண்டவனின் செயல். தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் பண்றோம்.
இந்த படத்துக்கு ரிவ்யூஸ் அவ்வளவு சாதகமாக இல்லை. படம் ரிலீஸான பிறகு சனிக்கிழமை நைட்டில் இருந்தே மழை. மழைனா சாதாரண மழை இல்லை. அந்த மாதிரி மழையை பார்த்து ரொம்ப நாளாச்சு. ஜனங்க நடமாடவே முடியல. அப்புறம் தியேட்டருக்கு எப்படி வருவது. இது ரிலீஸாகிட்டு 3 நாளுக்கு பிறகு ஆச்சு. தீபாவளிக்கு முந்தைய நாள் ஆகியிருந்தது என்றால் யார் வந்திருப்பாங்க தியேட்டருக்கு, கண்டிப்பாக படம் தோல்வி அடைந்திருக்கும். இது கூட ஆண்டவனுடைய செயல்.
சிவா, கலாநிதி மாறனின் நல்ல மனசால படம் நல்லா போச்சு. இந்த மழை வரலனா இன்னும் நல்லா போயிருக்கும். இதெல்லாம் பார்க்கும் போது பாட்ஷா படத்துக்கு நான் பேசிய டயலாக் நினைவுக்கு வருது. ஆண்டவன் நல்லவங்கள சோதிப்பான், ஆனால் கைவிட மாட்டான். ஆனால் கெட்டவங்கள...?” இவ்வாறு ரஜினிகாந்த் அந்த ஆடியோவில் பேசியுள்ளார்.