பரிசோதனை முயற்சியாக ஒத்த செருப்பு சைஸ் 7 திரைப்படத்தின் மூலம் தேசிய விருது பெற்ற இயக்குநர் இராதாகிருஷ்ணன் பார்த்திபன், தமது அடுத்த பரிசோதனை முயற்சித்திரைப்படமாக இரவின் நிழல் எனும் சிங்கிள் ஷாட் திரைப்படத்தை உருவாக்கியுள்ளார்.
அதிலேயும் உலகின் முதல் நான் லீனியர் படமாக இந்த திரைப் படத்தை உருவாக்கியிருக்கிறார். சுமார் 2 மணி நேரத்துக்கு ஒளிபரப்பாகும் முழு படத்தின் காட்சியை கிம்பிள் கேமரா கொண்டு முழுவதுமாக ஒரே முழு நீள ஷாட்டாக படம்பிடித்த நிலையில், தேவைப்படும் அனைத்து இடங்களுக்கும் 'ஃபோகஸ் ஷிப்ட்' செய்துள்ளார்கள்.
குறிப்பாக இந்த சிங்கிள் ஷாட் திரைப்பட உருவாக்கத்துக்கு தகுந்தாற்போல், 59 அரங்கங்கள் கொண்ட பிரமாண்டமான செட்டை உருவாக்கியுள்ளார்கள். இந்த திரைப்படத்தில் ஏறத்தாழ நூற்றுக்கணகான நடிகர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் பணியாற்றியுள்ளனர்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசை மற்றும் பின்னணி இசை அமைத்த இந்த படத்துக்கு சிவகுமார் ஆடியோகிராபியை செய்ய, ஆர்துர்.ஏ.வில்சன் ஒளிப்பதிவு செய்துள்ளார். விஜய் முருகன் கலைப்பணியை கவனித்துக்கொண்டுள்ளார். மேலும் பல ஆடை, ஒப்பனை மாற்றங்களுடன் 50 வருடம் பயணிக்கும் ஒரு மனிதனின் கதையாக இந்த படம் உருவாகி வந்துள்ளது.
ஆம், ஜூலை 15-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் இரவின் நிழல் திரைப்படத் திரையிடலுக்கு முன்பாக அன்று ஒருநாள் மட்டும் திரையரங்கில் இப்படத்தின் மேக்கிங் வீடியோவை ஒளிபரப்பவிருக்கிறார்கள். இதில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், “இயக்குநர் பார்த்திபன் ஏற்கனவே ஒத்த செருப்பு திரைப்படத்தில் ஒரு சாதனை படைத்து தேசிய விருதினை பெற்றிருந்தார்.
எப்போதும் புது வித்தியாசமான முயற்சியை செய்யும் கலைஞனான பார்த்திபன் உலக அளவில் யாரும் பண்ணாத நான் லீனியர் திரைக்கதை கொண்ட படத்தை சிங்கிள் ஷாட்டில் இயக்கியிருக்கிறார். அவருக்கு வாழ்த்துக்கள்” என இயக்குநர் இராதாகிருஷ்ணன் பார்த்திபனின் முயற்சியை பாராட்டியுள்ளார்.