சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்திய சுதந்திர தின விழாவை முன்னிட்டு டிவிட்டரில் வீடியோ வெளியிட்டுள்ளார்.
இந்திய நாட்டின் 75வது சுதந்திர தின விழா வரும் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி அன்று அனுசரிக்கப்படுகிறது. இதனை மிகப்பெரிய அளவில் கொண்டாட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அசாதி கி அம்ரித் மஹாஉத்சவ் என இந்த நிகழ்வில் 75 வாரங்கள் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதற்காக குடியரசு தலைவர் மாளிகையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் ரஜினிகாந்த் கலந்து கொண்டார். அந்த கூட்டத்தில் சமூக வலைத்தளங்களில் உள்ள இந்தியர்கள் தங்களின் முகப்பு படமாக தேசிய கொடியை வைக்கவும், ஒவ்வொரு இந்தியர்களின் வீடுகளில் தேசிய கொடியை ஏற்றவும் கேட்டுக்கொள்ளப்பட்டது.
அதனை முன்னிட்டு ரஜினிகாந்த் தனது டிவிட்டர் பக்கத்தில் தேசிய கொடியை முகப்பு படமாக ஏற்கனவே வைத்துள்ளார். நேற்று ரஜினியின் போயஸ் கார்டன் வீட்டு வாசலில் மூவர்ண இந்திய தேசியக் கொடி ஏற்றப்பட்டது..
இந்நிலையில் தற்போது நடிகர் ரஜினிகாந்த் தனது டிவிட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் ஜாதி, மத கட்சி வேறுபாடின்றி அனைத்து இந்தியர்களும் 75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு 2 அடி அல்லது 3 அடி கம்பில் தேசிய கொடியை ஏற்றி வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். பள்ளிக் குழந்தைகள், இளைஞர்கள் மூலம் இதை செய்யுங்கள் என்றும் கூறியுள்ளார். "நாடு இல்லேன்னு சொன்னா நாம இல்லை" என கூறி ஜெய்ஹிந்த் என முழக்கமிட்டுள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த 169வது படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களின் இயக்குனர் நெல்சனுக்கு இயக்குகிறார். இந்த படத்தையும் சன்பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்கிறது. இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.
இப்படத்தின் டைட்டில் லுக் ஏற்கனவே வெளியாகி உள்ளது. இப்படத்துக்கு 'ஜெயிலர்' என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கி உள்ளது. இப்படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் முக்கிய வேடத்தில் நடிக்கின்றார்.