நடிகர் ரஜினிகாந்த் தனது போயஸ் கார்டன் வீட்டருகே உள்ள சென்னை ஆழ்வார்பேட்டை தனியார் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வழக்கமான முழு உடல் பரிசோதனைக்காக ரஜினிகாந்த் சென்னை காவேரி மருத்துவமனை சென்றுள்ளார். ஒரு நாள் மருத்துவமனையில் இருந்து பரிசோதனை மேற்கொள்வார். பின்னர் வீடு திரும்புவார் என ரஜினிகாந்த் சார்பில் திருமதி லதா ரஜினிகாந்த் அறிவித்திருந்தார். சில தினங்களுக்கு முன் 67-வது தேசிய விருது வழங்கும் விழா டெல்லியில் நடந்தது. இதில் ரஜினிகாந்துக்கு இந்திய திரைத்துறையில் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது.
விருதைப் பெற்ற பின், ரஜினிகாந்த் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின. இதற்காக டெல்லி சென்று ரஜினிகாந்த் சென்னை திரும்பி இருந்தார். சென்னை திரும்பிய பின் 27.10.2021 அன்று தனது குடும்பத்தினருடன் சன் டிவி அலுவலகத்தில் அண்ணாத்த படத்தை பிரத்யேகமாக பார்த்ததும் குறிப்பிடத்தக்கது.
இன்று காலை ரஜினி உடல்நிலை குறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் பத்திரிக்கையாளர் சந்திப்பில் சில தகவல்களை கூறினார். அதில் ரஜினிகாந்த் நலமுடன் இருப்பதாக காவேரி மருத்துவமனை நிர்வாகம் அரசிடம் தெரிவித்துள்ளது. திருமதி லதா ரஜினிகாந்தும் இதை உறுதிப்படுத்தி உள்ளார் என அமைச்சர் கூறி இருந்தார்.
இந்நிலையில் காவேரி மருத்துவமனை நிர்வாகம் சார்பில் ரஜினி உடல்நிலை குறித்து அதிகாரப்பூர்வமான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் திரு ரஜினிகாந்த் நேற்று (28 அக்டோபர் 2021) மயக்கம் காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் மருத்துவர்களின் நிபுணர் குழுவால் முழுமையாக மதிப்பீடு செய்யப்பட்டார் மற்றும் கரோடிட் ஆர்டரி ரிவாஸ்குலரைசேஷன் செய்ய அறிவுறுத்தப்பட்டார். இந்த செயல்முறை இன்று (29 அக்டோபர் 2021) வெற்றிகரமாக செய்யப்பட்டது மற்றும் அவர் நன்றாக குணமடைந்து வருகிறார். சில நாட்களுக்குப் பிறகு அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார், என கூறப்பட்டுள்ளது.