கொரோனா நிவாரண நிதியாக நடிகர் ரஜினிகாந்த், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைமை செயலகத்தில் சந்தித்து, ரூ.50 லட்சம் வழங்கினார் .
இந்தியாவில் கொரோனா 2-ம் அலை மிக தீவிரமாகி வரும் நிலையில், பெருகிவரும் கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக இந்தியா மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் கொரோனாவுக்கு எதிரான போரில் களத்தில் நின்று கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் தொற்றுப்பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் உள்ளிட்டவற்றுக்காக தமிழக அரசுடன் கைகோர்க்கும் விதமாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நன்கொடை வழங்கிட வேண்டுமென்று அனைவருக்கும் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
குறிப்பாக இந்த கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஒவ்வொருவரும் அளிக்கக்கூடிய நன்கொடைகள் ஆக்சிஜன் உற்பத்தி, சேமிப்பு நிலையங்கள் அமைத்தல், ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய படுக்கைகள் ஏற்பாடு செய்தல், ஆக்சிஜன் செரிவூட்டும் இயந்திரங்கள், ஆர்.டி.பி.சி.ஆர். கிட்கள், உயிர்காக்கும் மருந்துகள், தடுப்பூசிகள் மற்றும் பிற மருத்துவக் கருவிகளை வாங்குதல் போன்ற கொரோனா அடிப்படை கொரோனா நிவாரண நடவடிக்கைகளுக்கு முழுமையாகப் பயன்படுத்தப்படும் முதல்வர் உறுதி அளித்திருந்தார்.
இந்த நிலையில் தான் பிரபலங்கள், தொழிலதிபர்கள், பொதுமக்கள், திரைத்துறையினர் பலரும் முதல்வரிடம் நிதிகளை அளித்து வருகின்றனர். அந்த வகையில் தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த, நடிகர் ரஜினிகாந்த் கொரோனா நிவாரண நிதியாக ரூ.50 லட்சம் வழங்கியுள்ளார். சில தினங்களுக்கு முன்புதான் ரஜினிகாந்தின் இளைய மகளான செளந்தர்யா, தனது கணவர் விசாகனுடன் இணைந்து தமிழக முதல்வரை நேரில் சந்தித்து, கொரோனா தடுப்பு பணிக்காக ரூ.1 கோடி வழங்கியிருந்தார்.